2017-01-26 15:20:00

வரலாற்றுக் காயங்களை மறந்து, இணைந்து நடக்க அழைப்பு


சன.26,2017. சிலுவையில் அறையுண்டு, உயிர்த்த இயேசுவை, திருத்தூதர் பவுல் சந்தித்தபோது, மன்னிப்பு, நம்பிக்கை, ஆறுதல் ஆகிய உணர்வுகளை புரிந்துகொண்டார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று மாலை வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

சனவரி 25, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித பவுலின் மனமாற்ற விழாவன்று, உரோம் நகர் வெளிச்சுவருக்கருகே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில், மாலை வழிபாட்டினை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வழிபாட்டில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்துவை சந்தித்ததால் புது வாழ்வு பெற்ற புனித பவுல், ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்செய்தியை தனக்குள் பூட்டி வைத்துக்கொள்ளாமல், அதை உலகெங்கும் பறைசாற்றினார் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

ஒப்புரவு, ஒருங்கிணைப்பு என்பவை, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சி என்று சொல்வதைவிட, அவை இறைவனிடமிருந்து வரும் கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள கொடைகளை புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும் கற்றுக்கொண்டால், கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் எளிதான முயற்சியாக மாறும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

"பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ" (2 கொரி. 5:17) என்று கூறிய புனித பவுல், தன் பழைய வாழ்வையும், வழிகளையும் முற்றிலும் விடுத்து புதிய வாழ்வைத் தொடர்ந்ததுபோல், நம்மையும் அவ்வாறே செயலாற்ற அழைக்கிறார் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முழுமை பெறவேண்டுமெனில், நம் பழைய வரலாற்றின் கசப்பான நிகழ்வுகளிலேயே தங்கி, செயலற்று போகாமல், புதிய வழியில் அனைவரும் இணைந்து நடக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில், கத்தோலிக்க, லூத்தரன் சபைகளுக்கிடையே ஏற்பட்ட பிரிவின் 500ம் ஆண்டை குறிப்பாக நினைவுகூர்ந்து, பிரிவிலிருந்து ஒருமை நோக்கி மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் கொண்டாடுகிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய கிறிஸ்தவ உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நிகழ்வாக நடைபெற்ற இந்த மாலை வழிபாட்டில், திருத்தந்தையுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதியும், ஆங்கிலிக்கன் சபையின் பிரதிநிதியும் கலந்துகொண்டதற்காக திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.