2017-01-26 15:53:00

புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் சிலையை அர்ச்சித்த திருத்தந்தை


சன.26,2017. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றத்தாரர் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள அக்கறையின் மற்றொரு வெளிப்பாடாக, இப்புதனன்று காலை, ஒரு பளிங்குச் சிலையை திருத்தந்தை அர்ச்சித்தார்.

புலம்பெயர்ந்தோரை வரவேற்பது என்ற கருத்தை மையப்படுத்தி, இத்தாலிய சிற்பி, மவுரோ வாக்காய் (Mauro Vaccai) அவர்கள் செதுக்கியிருந்த ஒரு சிலையை, இப்புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னதாக திருத்தந்தை அர்ச்சித்தார்.

இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள லாம்பதூசா தீவிற்கு வருகை தரும் புலம் பெயர்ந்தோரை, இத்தாலிய அரசு அதிகாரிகள் வரவேற்பதைச் சுட்டிக்காட்டும் இந்தப் பளிங்குச் சிலை, அத்தீவில் ஒரு நினைவுச் சின்னமாக நிறுவப்பட உள்ளது.

800 கிலோ கிராம் எடையுள்ள இந்தச் சிலையை, இத்தாலிய கடற்படையினரின் உதவியுடன், லாம்பதூசா துறைமுகத்தில் நிறுவப்போவதாக, சிற்பி வாக்காய் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, தன் தலைமைப்பணியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகருக்கு வெளியே மேற்கொண்ட முதல் பயணம், லாம்பதூசா தீவுக்கென்பதும், அங்கு, உலக மயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை பற்றி அவர் பேசியதும், குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.