2017-01-26 16:12:00

புனித வின்சென்ட் தே பவுல் குழும 400ம் ஆண்டு கொண்டாட்டங்கள்


சன.26,2017. புனித வின்சென்ட் தே பவுல் நிறுவிய துறவுக் குழுமங்களின் 400ம் ஆண்டு கொண்டாட்டங்கள், சனவரி 25, இப்புதனன்று துவங்கியுள்ளன.

1617ம் ஆண்டு, சனவரி 25ம் தேதி, புனித பவுல் மனமாற்ற திருநாளன்று, புனித வின்சென்ட் தே பவுல், தன் முதல் மறைபரப்புப்பணி மறையுரையை வழங்கியதன் நினைவாக, இந்த நூற்றாண்டு நிகழ்வுகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்த நூற்றாண்டு நினைவாக, புனித வின்சென்ட் தே பவுல் திருப்பண்டங்கள், சனவரி 25, இப்புதனன்று, பிரான்ஸ் நாட்டின் Folleville என்ற இடத்திலிருந்து தன் உலகளாவிய பயணத்தைக் துவங்கியுள்ளது என்று, இக்குழுமத்தின் உலகத் தலைவர், Tomaž Mavrič அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகின் பல நாடுகளில் பணியாற்றிவரும் வின்சென்ட் தே பவுல் குழுமத்தினர், வறியோரின் நலவாழ்வைப் பேணும் பணியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

ஆண் பெண் இருபால் துறவியர், பொது நிலையினர் என்று பல கிளைகள் கொண்ட புனித வின்சென்ட் தே பவுல் குழுமம், 80க்கும் மேற்பட்ட நாடுகளில், 225 அமைப்புக்கள் வழியே பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.