2017-01-26 14:49:00

பாசமுள்ள பார்வையில் : இளையோருக்கு வழிகாட்டும் தமிழ்த்தாய்


தன் நிறுவனம் அருகே, தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்துவரும் ஒரு பாட்டி பற்றி நண்பர் ஒருவர், சமூகவலைத்தளம் ஒன்றில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தப் பாட்டி, ஒரு நாளைக்கு பத்து கிலோ மீட்டர் தூரம், தன் சைக்கிளைத் தள்ளிச் சென்று வியாபாரம் செய்கிறார். கம்மங்கூழை, சமையல் வாயு அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று, விறகு அடுப்பில் பானை வைத்து இவரே தயாரிக்கிறார். அந்தப் பாட்டி விற்கும் ஒரு குவளை கம்மங்கூழின் விலை வெறும் ஐந்து ரூபாய்தான். அதனால் அந்தப் பாட்டியிடம், அந்த நண்பர், ஊரே பத்து ரூபாய்க்கு விற்கும்போது, நீங்கள் ஏன் விலையை ஏற்றவில்லை? இவ்வளவு சிரமப்பட்டு, ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள்? என்று, கேட்டார். அதற்கு அந்தப் பாட்டி, என் உழைப்புக்குரிய ஊதியம் இப்போதே கிடைக்கிறது, அதிக இலாபம் எனக்குத் தேவை இல்லை என்று பதில் சொன்னார். இந்தப் பாட்டியின் இந்தப் பதிலும், வியாபரத்தில் இவர் காக்கும் நாணயமும், தன் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என, அந்த நண்பர், தனது பகிர்வில் குறிப்பிட்டுள்ளார். இப்பாட்டி பற்றி வலைத்தளத்தில் வாசித்த சிலர், இவ்வாறு தங்களின் பாராட்டுக்களைப் பதிவுசெய்துள்ளனர்.   

வயது ஆனாலும், யாரிடமும் கையேந்தாமல் தான் உழைத்து சாப்பிட வேண்டும் என்று உழைக்கும் அந்த அம்மாவுக்கு ஒரு சல்யூட்.

பெற்றோருக்கு, பசிக்கு உணவு வழங்க மறுக்கும் இந்தக் காலத்தில், என்னால் உழைத்து மூன்று வேளையும் சாப்பிட முடியும் என்று சாதித்துக் கொண்டிருக்கும் தாய்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

இந்த வயதில், இளையவரைப் போல் உழைக்கும், என் தமிழ் பாட்டியின் இனிய பணி தொடர நல்வாழ்த்துக்கள்.

நோ்மையாக வாழ்வதற்கு நல்ல மனமும், மனத் துணிவும் மட்டும் போதும் என்று வாழும் இந்தப் பாட்டி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார். நன்றிகள் பலகோடியம்மா..

போதும் என்ற மனப்பான்மை ஒருவருக்கு வந்து விட்டால் நிம்மதியும் மகிழ்வும் நம் வாழ்வில் நிரந்தரம் என்பதை உணர்ந்த அம்மா, நீவீர் வாழ்க பல்லாண்டு!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.