2017-01-26 15:48:00

திருத்தந்தையுடன் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநர்


சன.26,2017. "நிலத்தில் விழுந்த விதை, செடியாக வளர்வதுபோல், நம்பிக்கை, புதிய வாழ்வை மலரச் செய்கிறது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக, சனவரி 26, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

மேலும், சனவரி 25, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநர், Arnold Schwarzenegger அவர்களைச் சந்தித்தார்.

“R20 - Regions of Climate Action” என்ற பெயரில், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு இயக்கம் ஒன்றை உருவாக்கியுள்ள Schwarzenegger அவர்கள், தன் இயக்கத்தின் செயல்பாடுகள் அடங்கிய ஒரு புகைப்படத் தொகுப்பை திருத்தந்தைக்கு அளித்தார்.

2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு முடிய கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றிய Schwarzenegger அவர்கள், தன் ஆளுநர் பணிக்காலத்தில் கலிபோர்னியா மாநிலமெங்கும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் கடினமான சட்டங்களை வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வியாழன் காலை, கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளில் பணியாற்றும் ஆயர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத் லிமினா சந்திப்பை மேற்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.