2017-01-25 15:02:00

மறைக்கல்வியுரை : நம்பிக்கையைக் கொணர்ந்த, பெண்ணின் மன உறுதி


சன.,25,2017. உரோம் நகரில், குளிரின் தாக்கம் மிகச் சிறிய அளவில் குறைந்து, சூரியனின் கதிர்கள் வெளிச்சம் மிகுந்ததாய் வந்துகொண்டிருக்கின்றபோதிலும், திருத்தந்தையின் இவ்வார புதன் மறைபோதகம் வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம் பெற்றது. இலேசான குளிர்ந்த காற்று வெளியே வீசிக்கொண்டிருக்க, ஆறாம் பவுல் அரங்கமோ, திருப்பயணிகளால் நிரம்பி வழிய, 'கிறிஸ்தவ நம்பிக்கை’ குறித்த தன் மறைக்கல்வித் தொடரில், இப்புதனன்று, ஒரு பெண்ணின் மனவுறுதி, மக்களுக்கு நம்பிக்கையைக் கொணர்ந்தது என, திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும், யூதித்தை முன்னிறுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பழைய ஏற்பாட்டு நூலின் யூதித்து நூல், அசீரியப் படைத்தளபதி ஒலோபெரின்,   பெத்தூலியா நகரை ஆகரமித்தபோது, அங்குள்ள மக்கள் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து விவரிக்கின்றது. தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், அந்நகரின் தலைவர்கள் ஒன்றுகூடி, ‘இன்னும் ஐந்து நாட்கள் காத்திருப்போம், அதற்குள் இறைவனின் உதவி நமக்குக் கிட்டும்’ என உறுதியாக நம்பி காத்திருந்தனர். இத்தகைய ஒரு சூழலில்தான், அந்த தலைவர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களின் ஊசலாடும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒரு திட்டத்தை முன்வைக்கிறார் யூதித்து. அதுவே எதிரிகள்மீது வெற்றியையும் கொணர்ந்தது. மனவுறுதியும் ஞானமும் கொண்ட இந்தப் பெண்ணின் எடுத்துக்காட்டு, இறைவனின் வழிநடத்தல் அக்கறையில் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதையும், அவரின் விருப்பத்தைப் புரிந்துகொள்வதற்கு, செபம் மற்றும் பணிவு வழியாக முயலவேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறது. மேலும், நம் பாதையில் வரும் சவால்களை எதிர்கொள்ள, நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டியதன் தேவையையும், இந்த உறுதியான பெண்மணி யூதித்து அவர்களின் எடுத்துக்காட்டு நமக்குச் சொல்லித் தருகிறது. இயேசு எவ்வாறு தந்தைக்கு அடிபணிந்து நடந்ததுடன், கெத்சமனி தோட்டத்தில் தந்தையாம் இறைவனை நோக்கி, 'என் விருப்பம் அல்ல, உமது விருப்பமே நிறைவேறட்டும்' என கூறினாரோ, அதே முறையில் நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிய, யூதித்து அவர்களின் விசுவாசம் நமக்குத் தூண்டுதலாக உள்ளது. 

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நாட்களில், இங்கு வந்திருக்கும் போசே கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கும், வெஸ்ட்மின்ஸ்டர் பேராலய பாடகர் குழுவுக்கும், தன் சிறப்பு வாழ்த்துக்களை வழங்கினார். அங்கு குழுமியிருந்தோருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அமைதியும் மகிழ்வும் கிட்டட்டும் என வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.