2017-01-25 15:21:00

இஸ்பானிய நாளிதழ் El Paísக்கு திருத்தந்தை அளித்த பேட்டி


சன.25,2017. ஒவ்வொரு நாடும் தன் எல்லைகளைப் பாதுகாக்கும் உரிமையைப் பெற்றுள்ளது எனினும், தன் நாட்டு மக்கள், அண்டை நாட்டு மக்களுடன் உரையாடல் மேற்கொள்வதை தடுப்பதற்கு, எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத்தலைவராக டொனால்டு டிரம்ப் அவர்கள் பொறுப்பேற்ற கடந்த வெள்ளிக்கிழமையன்று, El País என்ற இஸ்பானிய நாளிதழுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பேட்டியை வழங்கியுள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்கும் டிரம்ப் அவர்கள் குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளிக்கையில், இந்நிகழ்வைக் குறித்து, உடனடியாக, அச்சமோ, ஆனந்தமோ கொள்வதற்குப் பதில், பொறுத்திருந்து பார்ப்போம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நெருக்கடியான சூழலைச் சந்திக்கும் ஒரு நாட்டு மக்கள், தகுந்த முறையில் சிந்திக்காமல், தங்கள் நாட்டின் மீட்பராக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் ஆபத்து உள்ளது என்று கூறிய திருத்தந்தை, அதற்கு, 1933ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிட்லர் அவர்களை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

நாட்டு மக்களின் தனித்துவத்தை நிலைநாட்ட தேர்ந்தெடுக்கப்படும் இத்தகைய மீட்பர், அந்த தனித்துவத்தை உறுதி செய்ய, வேலிகளையும் சுவர்களையும் எழுப்புவது, தவறான ஒரு முயற்சி என்பதை, தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.

மத்திய தரைக்கடல் புலம்பெயர்ந்தோரின் கல்லறையாக மாறிவருவதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, திருஅவையும், ஐரோப்பிய அரசுகளும் இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

இத்தாலி நாடு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டாலும், கிரேக்க நாடு, பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டாலும், புலம் பெயர்ந்தோர் மீது அவர்கள் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது என்று, தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார், திருத்தந்தை.

உலகில் நிலவும் ஊழல் குறித்து கேள்விகள் எழுந்தபோது, பணம் என்ற கடவுளை கத்தோலிக்க திருஅவையும், திருத்தந்தையரும், ஏனைய திருஅவைத் தலைவர்களும் வணங்கி வந்தனர் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மக்களின் துன்பங்களைக் கண்டும், உணர்வேதுமின்றி, ஒதுங்கிப்போகச் செய்வது, பணம் என்ற கடவுளே என்று கூறினார்.

1990ம் ஆண்டு முதல் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்று தன் பேட்டியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பு, தன் சொந்த பழக்க, வழக்கங்களை பெரிதும் மாற்றவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.

அதிகாரம் குறித்து கேள்விகள் எழுந்தபோது, தற்போது, திருஅவையின் அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டிருப்பதால், தனக்கு பெரும் பாரமாகத் தெரியவில்லை என்றும், பொது நிகழ்வுகளில் பின்பற்றப்படும் protocols எனப்படும் சடங்கு முறைகள் தனக்கு சங்கடங்களை விளைவிக்கின்றன என்றும், El País இஸ்பானிய நாளிதழுக்கு வழங்கிய  பேட்டியில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.