2017-01-25 15:35:00

அணு ஆயுதங்களை ஒழிக்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபடுவேன்


சன.25,2017. அணு ஆயுதங்களை அறவே ஒழிக்கும் பணியில் நான் முழு மூச்சாக ஈடுபடுவேன் என்று ஐ.நா. பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

சனவரி 24, இச்செவ்வாயன்று, ஆயுதங்களை ஒழிப்பது குறித்து ஜெனீவாவில் துவங்கிய ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, கூட்டேரஸ் அவர்கள் அனுப்பிய காணொளிச் செய்தியில், உலகில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்களில் மனித உரிமைகள் மிகவும் அதிகமாகப் பறிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

அணு ஆயுதங்களை ஒழிக்கும் அதேவேளையில், வேறு பல வழிகளில் மக்களை அழிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள உயிரியல், வேதியல் ஆயுதங்களையும் இவ்வுலகிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்கு, அனைவரும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று  கூட்டேரஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் விண்ணப்பித்தார்.

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளை, செப்டம்பர் 26ம் தேதி கடைபிடிக்கும்படி ஐ.நா. அவை உறுதி செய்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.