2017-01-24 15:54:00

வத்திக்கான் அருங்காட்சியகத்தின் புதிய வலைத்தளங்கள்


சன.24,2017. வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள மிகச் சிறந்த கலைவேலைப்பாடுகள், பழமையான எழுத்துப் பிரதிகள் மற்றும், பிற அரிய பொருள்களை, உலகில், இன்னும் அதிகமான மக்கள் அறிந்துகொள்ளும் நோக்கத்தில், தனக்கென யு டியூப் சானலை உருவாக்கியுள்ளதோடு, தனது இணையதளத்தை, உயர்தரமாகப் புதுப்பித்துள்ளது, வத்திக்கான் அருங்காட்சியகம்.

இப்புதிய நடவடிக்கை பற்றி செய்தியாளர் கூட்டத்தில், இத்திங்களன்று விளக்கிய, வத்திக்கான் அருங்காட்சியக புதிய இயக்குனர் பார்பரா ஜாட்டா அவர்கள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், ஜெர்மன் ஆகிய மொழிகளில், யு டியூப் சானல் மற்றும், புதிய இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று தெரிவித்தார்.

இந்த அருங்காட்சியகத்திலுள்ள மிகச் சிறந்த கலைவேலைப்பாடுகளில்,  ஏறக்குறைய நான்காயிரத்தை, இணையதளத்தில் காண வகைசெய்யப்பட்டுள்ளது எனவும், இன்னும் ஓராண்டில், இந்த அருங்காட்சியகத்திலுள்ள இருபதாயிரத்திற்கும் அதிகமான கலைவேலைப்பாடுகள் அனைத்தையும் இணையதளத்தில் பார்வையிட முடியும் எனவும் அறிவித்தார் ஜாட்டா.

வத்திக்கான் அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான இரண்டு இலட்சம் கலைவேலைப்பாடுகளில், ஒரு சிறு பகுதியே, சேமிப்பு அறைகளில் அல்லது, பொதுமக்கள் பார்வையிட முடியாத இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார், ஜாட்டா.

மேலும், செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத் துறைத் தலைவர், பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்கள், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

வத்திக்கான் அருங்காட்சியகம், திருப்பீடத்தின் கலாச்சாரச் சொத்தின் ஒரு பகுதி என்றும், கலை, உரையாடல் மற்றும் சந்திப்பின் இடமாக இருக்கின்றது என்றும், தெரிவித்தார், பேரருள்திரு Viganò.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.