2017-01-24 15:29:00

எரிபொருட்களை ஊற்றி நெருப்பை அணைக்க முயலாதீர்


சன.24,2017. குற்றக் கும்பல்கள் என்ற பிரச்னைக்கு வன்முறை ஒரு தீர்வாக முடியாது என தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார், சான் சல்வதோர் துணை ஆயர் கிரகோரியோ ரோசா சாவேஸ்.

எல் சால்வதோர் நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆயர் சாவேஸ் அவர்கள், தீயை அணைப்பதற்கு யாரும் எரிபொருட்களை அதன்மேல் ஊற்றமாட்டார்கள், குற்றக்கும்பல்களின் நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு, மாற்று வழிகளின் தேவை உள்ளது என்றார்.

மக்களிடையே தினசரி உயிரிழப்புக்களையும், துன்பங்களையும் உருவாக்கும் குற்றக் கும்பல்களின் வன்முறைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஆயர் சாவேஸ் அவர்கள், இந்நாட்களில் ஆயுதங்களின் மொழியை நாம் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருப்பதால்தான், ஒவ்வொரு நாளும் இறந்த சடலங்களை எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் உரைத்தார்.

சான் சால்வதோர் நாட்டு பத்திரிகையாளர்களின் கூற்றுப்படி, அந்நாட்டில் குற்றக் கும்பல்களில் 70 ஆயிரம் பேர் உள்ளனர். ஏறத்தாழ 16,000 பேர், மிகவும் பாதுகாப்பான சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.