2017-01-23 15:46:00

பாசமுள்ள பார்வையில்.. தந்தையாக வாழ்ந்த இலட்சியத் தாய்


எகிப்து தலைநகர் கெய்ரோவைச் சேர்ந்தவர் சிசா அபு தாவோக் (66). நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இவர் கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது கணவர் இறந்து விட்டார். இதனால், சிசாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அவரது குல வழக்கப்படி கணவரை இழந்த பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. அடுத்தவரை நம்பி வாழ வேண்டும் என்ற நிலை. இப்படி வாழ சிசாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இதற்கிடையில், சிசா அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஹூடா எனப் பெயரிட்டார் சிசா. தனது மகளை, சீரும் சிறப்புடன் வளர்க்க முடிவெடுத்த சிசா அவர்கள், வேலைக்குச் சென்று தன் சொந்தக் காலில் நிற்க விரும்பினார். எனவே, மற்றவர்களின் கண்களுக்குத் தப்ப, ஆண்வேடம் அணிந்தார். மிகவும் தளர்வான உடைகளை அணிந்த சிசா, தனது முடி அலங்காரத்தையும் மாற்றினார். செங்கல் சூளை மற்றும் கட்டட வேலைக்கு, ஆண்களைப் போலவே சென்றார். தெருக்களில், காலணிகளைப் பளபளப்பாக்கும் வேலை செய்தார். அதன் வழியாகக் கிடைத்த ஊதியத்தில், தனது மகளை வளர்த்து படிக்க வைத்தார். பின்னர் தன் சொந்த ஊதியத்திலேயே மகளுக்குத் திருமணமும் நடத்தி வைத்தார். மகளின் திருமணத்தை முடித்த கையோடு, தன் பொறுப்புகள் தீர்ந்தன எனக் கருதி, தனது வேடத்தைக் கலைக்க எண்ணினார் சிசா. ஆனால், மகள் ஹூடா, குழந்தை பிறப்பின்போது நோய்வாய்ப்பட்டார். இதனால், மீண்டும், ஆண் வேடத்திலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சிசா அவர்களுக்கு உண்டானது. ஆண் வேடத்திலேயே வாழ்ந்துவரும் சிசா, தன் ஊதியத்திலேயே மகளையும், அவளது குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். சிசாவின் வாழ்க்கை பற்றி அறிந்த எகிப்து அரசு, அவருக்கு 2015ம் ஆண்டில், ‘இலட்சியத்தாய்’விருது வழங்கி கவுரவித்துள்ளது.

“தாழ்நிலையில் இருப்போரை ஆண்டவர் உயர்த்துகிறார் (லூக்.1,50-53)” என்று பாடினார் இலட்சியத்தாய் அன்னை மரியா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.