2017-01-23 16:06:00

திருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்துவின் குருத்துவத்தின் மகிமை


சன.23,2017. பாவங்களின் மன்னிப்புக்காகத் தம்மையே கையளித்து, தற்போது தந்தையாம் இறைவனிடம் நமக்காகப் பரிந்துபேசி வருவதுடன், நம்மை அழைத்துச் செல்ல, ஒருநாள் வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மகிமை குறித்து, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் குருத்துவம் என்பதை மையமாக வைத்து, இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்காகத் தம்மையேக் கையளித்து, நமக்காகப் பரிந்துரைத்துக்கொண்டிருப்பது, நம்மை அழைத்துச்செல்ல வரவிருப்பது, என இயேசுவின் குருத்துவத்தின் மூன்று கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.

மனிதர்களால் செய்யப்படும் எத்தகைய பாவங்களும் மன்னிக்கப்படும், ஆனால், தூய ஆவியாருக்கு எதிரான பாவங்கள், ஒருநாளும் மன்னிக்கப்படாது என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்தியம்பிய திருத்தந்தை, அன்பின் அடிப்படைக்கு, அதாவது, மீட்புக்கும், புதுப்படைப்புக்கும் எதிரான குற்றமாகிய, கிறிஸ்துவின், குருத்துவத்திற்கு எதிரான குற்றமே, மன்னிக்கப்பட முடியாதது என, இயேசு குறிப்பிடுவதாகக் கூறினார்.

நம் இதயங்களை நாம் மூடிக்கொள்ளாமல், இயேசுவின்  குருத்துவம் வழங்கும் வியப்புகள் குறித்து, ஆழமாக உள்வாங்கித் தியானிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.