2017-01-23 16:21:00

இரயில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை கோரும் டெல்லி பேராயர்


சன.23,2017. இஞ்ஞாயிறன்று, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள Vizianagram மாவட்டத்தில் இடம்பெற்ற உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், டெல்லி பேராயர் அனில் கூட்டோ.

39 பேரின் உயிர்களை பலிவாங்கியுள்ள இந்த இரயில் விபத்து குறித்து கவலையை வெளியிட்ட அதேவேளை, இந்தியாவில் அடிக்கடி இரயில் விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதை தடுப்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார் பேராயர்.

தற்காலிக அரசியல் மற்றும் ஏனைய இலாபங்களை கருத்தில் கொள்ளாமல், மக்களின் பாதுகாப்பிற்கு அரசுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார் பேராயர் கூட்டோ.

பல கோடி ரூபாய்களை செலவழித்து அதி விரைவு இரயில் திட்டத்தைக் கொணர முயலும் மத்திய அரசு, இப்போது பயன்படுத்தப்படும் தண்டவாளங்களின் பாதுகாப்பை பலப்படுத்த தவறுவதேன் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ள டெல்லி பேராயர் கூட்டோ அவர்கள், கடந்த ஓராண்டிலேயே இந்தியாவில் பல இரயில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.