2017-01-21 15:23:00

இந்தியா, நேபாளத்திற்கு, புதிய திருப்பீடத் தூதர்


சன.21,2017. இந்தியா மற்றும் நேபாளத்திற்கு, புதிய திருப்பீடத் தூதராக, பேராயர் ஜாம்பத்திஸ்த்தா திகுவாத்ரோ (Giambattista Diquattro) அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்த பேராயர் ஜாம்பத்திஸ்த்தா திகுவாத்ரோ அவர்கள், 1954ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி, இத்தாலியின் பொலோஞ்ஞோவில் பிறந்தவர்.

1981ம் ஆண்டில் அருள்பணியாளராகவும், 2005ம் ஆண்டில் பேராயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டு, 2005ம் ஆண்டில், பனாமா நாட்டிற்குத் திருப்பீடத் தூதராகவும், 2008ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, பொலிவியா நாட்டிற்குத், திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்டார் பேராயர் திகுவாத்ரோ.  

மேலும், புனித ஆக்னஸ் திருவிழாவான இச்சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு, வத்திக்கானிலுள்ள 8ம் உர்பான் சிற்றாலயத்தில், இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஆட்டுக் குட்டிகளின் உரோமத்திலிருந்து தயாரிக்கப்படும் பால்யங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்கள் பேதுரு, பவுல் விழாவன்று புதிய பேராயர்களுக்கு வழங்குகிறார்.

ஆக்னஸ் என்றால், இலத்தீனில், ஆட்டுக் குட்டி என்று அர்த்தம். இப்புனிதர், இளம் சிறுமியாக இருந்தபோதே, தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இறைவனுக்கு, தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கு, தன்னைத் திருமணம் செய்ய விரும்பிய ஆண்களுக்கு, இவர் மறுப்பு தெரிவித்தார். இதனால், இவர் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.