2017-01-20 15:27:00

சாமோவா தீவில் 5வது உலக திருத்தூது இரக்க மாநாடு


சன.20,2017. இரக்கம் பற்றிய ஐந்தாவது உலக திருத்தூது மாநாடு (WACOM V), 2020ம் ஆண்டில், ஓசியானியாவின் சாமோவா தீவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சில், இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டில், இம்மாநாட்டின் பொதுச் செயலர், அருள்பணி Patrick Chocholski அவர்கள், இதனை அறிவித்தார்.

பசிபிக் பெருங்கடலிலுள்ள Polynesia தீவுகளில் ஒன்றான Samoaவின் Apiaவில், இறைஇரக்கம் பற்றிய 5வது உலக மாநாடு, 2020ம் ஆண்டில் நடைபெறும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, 2008ம் ஆண்டில், முதல்முறையாக, உரோமையில் நடைபெற்றது.   

மேலும், பிலிப்பீன்சின் Marilao நகரில், உலகிலே மிக உயரமான, இறைஇரக்க இயேசுவின் திருவுருவம், இவ்வியாழனன்று திறக்கப்பட்டுள்ளது.

மனிலாவுக்கு வடக்கே, 24 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Marilao நகரில், இறைஇரக்க திருத்தலத்தின் நான்காவது மாடியில், 38 மீட்டர் உயரமான இறைஇரக்க இயேசுவின் திருவுருவம் திறக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில், இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டின் பிரதிநிதிகள் உட்பட, ஏராளமான விசுவாசிகள் கலந்துகொண்டனர்.

பிலிப்பீன்சில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரெஞ்சு கர்தினால் Philippe Barbarin அவர்கள், இம்மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றினார். 

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.