2017-01-20 15:06:00

இத்தாலி-கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செபம்


சன.20,2017. "கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, மனித முயற்சிகளின் பலனாகக் கிடைப்பது அல்ல, ஆனால், அது, மேலிருந்து வரும் கொடையாகும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், @pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில், இவ்வெள்ளியன்று பதிவு செய்துள்ளார்.

சனவரி 18, இப்புதன் முதல், சனவரி 25, வருகிற புதன் முடிய, கிறிஸ்தவ உலகத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், இதனை மையப்படுத்தி அமைந்துள்ளது

மேலும், மத்திய இத்தாலியில், மலைப்பகுதி பயணியர் விடுதி ஒன்றின்மீது ஏற்பட்ட கடும் பனிச்சரிவினால் பாதிக்கப்பட்ட மற்றும், பலியான மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்து வருகிறார் என, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அறிவித்தார். Rigopiano என்ற இந்தப் பயணியர் விடுதி, உரோம் நகருக்கு வடகிழக்கே, ஏறக்குறைய 135 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Gran Sasso மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

மத்திய இத்தாலியில், பனிப்பொழிவு, கடுமையாய் இடம்பெற்றுவருகின்றவேளை, இப்புதனன்று, அப்பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கங்களால், அப்பயணியர் விடுதி, பனியால் மூடப்பட்டது. அவ்விடுதியில் தங்கியிருந்த ஏறக்குறைய முப்பது பேரில், எட்டுப் பேரை, மீட்புக் குழுவினர் இதுவரை, உயிருடன் மீட்டுள்ளனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பனி மற்றும், கட்டட இடிபாடுகளுக்கிடையில், மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்கள் மற்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து செபித்து வருகிறார் எனவும், அப்பகுதியின் நிலை குறித்து, தொடர்ந்து தகவல்களை அளிக்குமாறு, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இத்தாலிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், பேராயர் Nunzio Galantino அவர்கள், வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.