2017-01-19 15:52:00

லூத்தர் - புதுப்பிக்கும் முயற்சி, பிரிக்கும் முயற்சி அல்ல


சன.19,2017. 500 ஆண்டுகளுக்கு முன், மார்ட்டின் லூத்தர் அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சி, திருஅவையை புதுப்பிக்கும் ஒரு முயற்சியே அன்றி, அதனைப் பிரிக்கும் முயற்சி அல்ல என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவைச் சார்ந்த பிரதிநிதிகளிடம் கூறினார்.

சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் ஒரு செயல்பாடாக, பின்லாந்து நாட்டிலிருந்து, இவ்வியாழன் காலை, வத்திக்கானுக்கு வருகை தந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சுவீடன் நாட்டிற்கு தான் மேற்கொண்ட பயணத்தை மகிழ்வுடன் நினைவுக்கூர்ந்து பேசினார்.

உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, நாம் அனைவருமே கிறிஸ்துவை நோக்கி மனமாற்றம் பெறுவதில் அடங்கியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, தூய ஆவியார் நமக்கு வழங்கும் மனமாற்ற அருளை பெறுவதற்கு, நாம் அனைவரும், திறந்த உள்ளத்துடன் காத்திருக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் ஒன்றிப்பை நோக்கி மேற்கொண்டுள்ள பயணத்திற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம் என்பதை, திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

லூத்தரன் சீர்திருத்த இயக்கத்தின் 500ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், துன்புறும் அனைவருக்காகவும், குறிப்பாக, தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புறும் அனைவருக்காகவும், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து உழைப்பது என்ற முடிவெடுத்திருப்பது போற்றுதற்குரியது என்று, திருத்தந்தை கூறினார்.

பின்லாந்து ஒரு தனி நாடாக மாறியதன் முதல் நூற்றாண்டை, 2017ம் ஆண்டு கொண்டாடும் வேளையில், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு இன்னும் ஆழமான சாட்சிகளாக வாழும் அழைப்பை பெற்றுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.