2017-01-19 15:57:00

மும்பையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டிற்கு அழைப்பு


சன.19,2017. சனவரி 20, இவ்வெள்ளியன்று, கத்தோலிக்கரும், பெந்தகோஸ்து சபையினரும் இணைந்து, மும்பை உயர் மறை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டை நடத்துகின்றனர் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மடலில், லூத்தரன் சீர்திருத்த அமைப்பு, இவ்வாண்டு சிறப்பிக்கும் 500ம் ஆண்டு நிறைவை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கரும், பெந்தகோஸ்து சபையினரும் இணைந்து நடத்தும் செப வழிபாட்டை, மும்பை, தாதரில் அமைந்துள்ள மீட்பின் அன்னை ஆலயத்தில் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார் என்றும், இதையொத்த முயற்சிகள், மும்பை உயர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்கு கோவில்களில் நடைபெறும் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில், அமைதி, நீதி ஆகியவற்றை வளர்ப்பது கிறிஸ்தவ சமுதாயத்தின் முதல் கடமை என்றும், இதற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு பெரும் உந்துசக்தியாக அமையும் என்றும், கிறிஸ்தவ உலக அவையின் தலைவர், சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களிடையே நிலவும் பிரிவுகளை, இந்து அடிப்படைவாதக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுத்த ஜார்ஜ் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம் இணைந்து, கல்வி, நலவாழ்வு ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றமுடியும் என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.