2017-01-19 15:43:00

திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் பியெத்ரோ பரோலின்


சன.19,2017. "நாம் கிறிஸ்துவிடம் வேண்டுவதால், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகவும் வேண்டுகிறோம். கிறிஸ்துவைப் பின்பற்றி அவரது அன்பிலும், ஒன்றிப்பிலும் வாழ விழைகிறோம்" என்ற சொற்கள் அடங்கிய டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 19, இவ்வியாழனன்று @pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சனவரி 18, இப்புதனன்று துவங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை தன் டுவிட்டர் செய்திகளின் கருப்பொருளாக்கி, புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் திருத்தந்தையின் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், பிப்ரவரி 11, லூர்து அன்னை திருநாளன்று, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் திருத்தலத்தில் சிறப்பிக்கப்படும் நோயுற்றோர் உலக நாள் நிகழ்வுகளில் தன் சார்பில் பங்கேற்க, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

1992ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, 1993ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, முதல் முறை கொண்டாடப்பட்ட நோயுற்றோர் உலக நாள், இவ்வாண்டு 25வது முறையாக சிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.