2017-01-17 15:14:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 3


"இவ்வுலகின் இலக்கியங்கள் அனைத்தும் நாளை அழிக்கப்படவுள்ளன; ஒரே ஒரு நூலை மட்டும் நான் பாதுகாக்க முடியும் என்று யாராவது அனுமதி தந்தால், நான் யோபு நூலை மட்டும் பாதுகாப்பேன்" என்று, பிரெஞ்சு கவிஞர் விக்டர் ஹுகோ (Victor Hugo) அவர்கள் கூறியுள்ளார்.

"பழமை, புதுமை இலக்கியங்கள் அனைத்திலும் தலைசிறந்த கவிதை, யோபு நூல்" என்று பிரித்தானியக் கவிஞர் ஆல்பிரெட் டென்னிசன் (Alfred Tennyson) அவர்கள் கூறியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பாக, அறிவுக் கருவூலமாக, உலக இலக்கியங்களில் தனியொரு இடம் பெற்றுள்ள நூல், யோபு நூல்.

பழைய ஏற்பாட்டு நூல்களில், 5 நூல்கள், கவிதை நூல்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. யோபு, திருப்பாடல்கள், நீதிமொழிகள், சபை உரையாளர், இனிமைமிகு பாடல் ஆகிய 5 நூல்கள், கவிதை நூல்களென கூறப்படுகின்றன. இவற்றில், யோபு, நீதி மொழிகள், சபை உரையாளர் என்ற மூன்று நூல்கள், கவிதை நூல்களாக மட்டுமன்றி, ஞான இலக்கிய நூல்கள் (Wisdom Literature) என்றும் பெயர் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசுவால்ட் சேம்பர்ஸ் (Oswald Chambers) என்ற போதகர், இந்த ஐந்து நூல்களின் இலக்கணத்தை இவ்விதம் சுட்டிக்காட்டியுள்ளார்: "துன்புறுவது எவ்விதம் என்பதை யோபு நூலும், செபிப்பது எவ்விதம் என்பதை திருப்பாடல்களும், எவ்விதம் செயலாற்றுவது என்பதை, நீதி மொழிகள் நூலும், வாழ்வை எவ்விதம் அனுபவிப்பது என்பதை, சபை உரையாளர் நூலும், அன்பு செய்வது எவ்விதம் என்பதை, இனிமைமிகு பாடல் நூலும் கூறியுள்ளன."

பொதுவாகவே, யோபு நூல், துன்பத்தைப்பற்றி கூறும் நூல் என்பது, யூத, கிறிஸ்தவ பாரம்பரியங்களில் நிலவிவரும் கருத்து. ஆனால், இந்நூல், துன்பத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. 'துன்பம்' என்ற பள்ளி வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைப் பாடங்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு கருவூலம், யோபு நூல்.

இந்த விவிலிய நூலில் தன் ஆய்வுகளை மேற்கொண்டு, வாழ்வின் எதார்த்தங்களுடன் இந்நூலின் கருத்துக்களைப் பொருத்தி, ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) என்ற யூத மத குரு, 'The Book of Job - When Bad Things Happened to a Good Person' அதாவது, 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற நூலை வெளிபிட்டார். இந்நூலின் துணையுடன், நாம் யோபு நூலில் விவிலியத் தேடல் பயணத்தைத் துவக்கியிருக்கிறோம்.

1935ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த ஹெரால்டு சாமுவேல் குஷ்னர் அவர்கள், இரண்டாம் உலகப் போரினாலும், அவ்வேளையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட நாத்சி கொடூரங்களாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர். 1964ம் ஆண்டு, அவருக்கு 29 வயதானபோது, ஒரு யூத மத இரபியாக, விவிலியத்தில் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். தன் பட்டத்தின் இறுதி ஆய்வுக்கட்டுரைக்கு அவர் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தன் வழிகாட்டியான பேராசியர் கின்ஸ்பர்க் (Ginsberg) அவர்களிடம் அதைப்பற்றிக் கூறினார். "விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மனிதத் துயரங்களில் கடவுளின் பங்கு" என்பது, தான் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு என்று குஷ்னர் அவர்கள் கூறியதும், பேராசியர் கின்ஸ்பர்க் அவர்கள், "இந்தத் தலைப்பில் உன் ஆய்வுகளை மேற்கொள்ள நீ இன்னும் தயாராக இல்லை" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். குஷ்னர் அவர்கள், தன் ஆய்வுக் கட்டுரைக்கு வேறொரு தலைப்பைத் தெரிவுசெய்ய வேண்டியதாயிற்று.

இந்நிகழ்வை தன் நூலின் முன்னுரையில் குறிப்பிடும் குஷ்னர் அவர்கள், அதைத் தொடர்ந்து, தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பெரும் துயரத்தைக் குறிப்பிடுகிறார். அதுதான், அவரது மகன் ஆரோன், 'Progeria' என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற துயரச் செய்தி.

குற்றமற்ற குழந்தைக்கு ஏன் இத்தகைய கொடிய நோய்? என்ற வேதனை கேள்வி தன்னை வாட்டிய வேளையில், Nahum Glatzer என்ற எழுத்தாளரின், "The Dimensions of Job" என்ற நூலின் வழியே, தன் வேதனைக்கு ஏதோ ஒரு வழியில் வடிகால் கிடைத்தது என்று, குஷ்னர் அவர்கள், தன் நூலின் முகவுரையில் கூறியுள்ளார்.

14 வயதே நிறைந்த தன் மகன் ஆரோனை பறிகொடுத்த வேதனையை உள்வாங்கி, போராடியதன் வெளிப்பாடாக, "When Bad Things Happen to Good People" அதாவது, "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது" என்ற நூல், வேதனையைக் குறித்து தான் வெளியிட்ட முதல் நூல் என்று கூறியுள்ளார், குஷ்னர். இந்நூலைத் தொடர்ந்து, மேலும் ஒன்பது நூல்களை தான் எழுதியதாகக் கூறும் குஷ்னர் அவர்கள், துன்பத்தை எதிர்கொண்டு வாழ்வதற்கு மதம் எவ்வகையில் துணை செய்கிறது என்பதை, இந்நூல்களில் தான் பகிர்ந்துள்ளதாகச் சொல்கிறார்.

"விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மனிதத் துயரங்களில் கடவுளின் பங்கு" என்ற தலைப்பில், 1964ம் ஆண்டு, தன் 29வது வயதில், தன் எண்ணங்களை எழுத விழைந்த குஷ்னர் அவர்கள், அப்பணியை, 2012ம் ஆண்டு, தன் 83வது வயதில் நிறைவேற்றியுள்ளதாகக் கூறுகிறார். "நல்லவர்கள் ஏன் துன்புறவேண்டும்?" என்று கோடான கோடி மக்கள் எழுப்பிவரும் வேதனை கேள்விக்கு விடை தேடும் ஒரு முயற்சியாக, 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற நூலை தான் எழுதியுள்ளதாக, இந்நூலின் முகவுரையில் விளக்கம் அளித்துள்ளார், குஷ்னர்.

இந்நூலுக்குள் அடியெடுத்துவைத்ததும், நம்மை வரவேற்கும் முதல் பிரிவின் தலைப்பு, நம்மில் பலர் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வியின் எதிரொலிபோல் ஒலிக்கிறது. "Does Everything Happen for a Reason?" அதாவது, "ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காக நிகழ்கிறதா?" என்பது, இப்பிரிவின் தலைப்பு. உலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களிலும், மனிதர்கள் மட்டுமே, காரண, காரியங்களைத் தேடும் திறமையுள்ளவர்கள் என்பதை, இப்பிரிவில் விளக்குகிறார், குஷ்னர். தன் தினசரி வாழ்வில் நிகழும் ஓர் எளிய அனுபவத்தை இப்பிரிவின் ஆரம்பத்தில் விவரிக்கிறார்.

குஷ்னரும் அவரது மனைவியும், தங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த ஒரு முற்றத்தில், ஒரு குழாயைப் பொருத்தி, அதில் தானியங்களை நிரப்பி வந்தனர். அவ்வழியே பறந்து சென்ற பறவைகளில் சில, அக்குழாயருகே வந்து, தானியங்களைக் கொத்திச் செல்வதை இருவரும் பார்த்து மகிழ்ந்தனர். விடுமுறை நாள்களில், அவர்கள் வீட்டில் இல்லாத வேளையில், அல்லது, மறதி காரணமாக, சில தருணங்களில், அக்குழாயில், தானியங்கள் இல்லாமல் போனதுண்டு. அவ்வேளைகளில், அங்கு வரும் பறவைகள், அக்குழாயைச் சுற்றி தானியங்களைத் தேடுவதையும், தானியங்கள் இல்லாததால், அவை பறந்து சென்றதையும் குஷ்னர் அவர்கள் கவனித்துள்ளார். அப்போது, அவருக்குள் எழுந்த எண்ணங்களை அவர் விவரித்துள்ளார்.

தானியங்கள் இல்லாததை உணரும் பறவைகளின் எண்ண ஓட்டம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை, ஓர் இறையியல் ஆசிரியர் என்ற முறையில், தான் சிந்தித்துள்ளதாக குஷ்னர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குழாயில் ஏன் சிலவேளைகளில் தானியங்கள் உள்ளன, ஏன் வேறு சில வேளைகளில் தானியங்கள் இருப்பதில்லை என்று, பறவைகள் கேள்வி கேட்கின்றனவா? தானியங்கள் இருப்பதற்கும், இல்லாமல் போவதற்கும், சூழ்நிலை, காலநிலை மாற்றம் இவை காரணங்கள் என்று பறவைகள் நினைக்கின்றனவா? ஒய்வு நாளன்று தானியம் கட்டாயம் இருக்கும் என்ற கணிப்புடன் பறவைகள் வருகின்றனவா? ... இவ்வாறு, பறவைகளின் சார்பில், நூலின் ஆசியர், ஹெரால்டு குஷ்னர் அவர்கள், கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இக்கேள்விகள், பறவைகள் மனதில் எழுந்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் குஷ்னர் அவர்கள், தானியங்கள் இருந்தால், மகிழ்வுடன் அவற்றைக் கொத்திச் செல்வதும், தானியங்கள் இல்லையெனில், அவற்றைத் தேடி வேறு இடங்களுக்குச் செல்வதும் மட்டுமே பறவைகளுக்குத் தெரிந்த வழிகளே தவிர, ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு பறவைகள் இடம் தருவதில்லை.

மனிதர்களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான்... அதாவது, தங்களைச் சுற்றி நிகழ்வனவற்றில் பொருள் தேடும் ஒரே இனம், மனித இனம். ஏனைய உயிரினங்கள் இவ்வாறு பொருள் தேடுவது கிடையாது என்று,  ஹெரால்டு குஷ்னர் அவர்கள் இந்நூலின் முதல் பிரிவில் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றை நம் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் ஒரு முயற்சியாகத் தான், நாம் அனைத்திலும் பொருள்தேடி, காரண, காரியங்களைத் தேடுகிறோம் என்று குஷ்னர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விதம் காரண, காரியங்களைத் தேடும் நம் முயற்சிகள், பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.

'குருவி உட்கார, பனம் பழம் விழுந்ததுபோல்' என்ற பழமொழியை அனைவரும் அறிவோம். தான் அமர்ந்ததால், பழம் விழுந்தது என்று, குருவி எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால், இந்த நிகழ்வைக் காணும் நாம், குருவி அமர்ந்ததையும், பழம் விழுந்ததையும் இணைத்துப் பார்க்க முயல்கிறோம். சில வேளைகளில், இவ்விதம் இணைப்பது, முழங்காலையும், மொட்டைத் தலையையும் முடிச்சுப்போடும் பயனற்ற முயற்சியாகவும் மாற வாய்ப்புண்டு. இருப்பினும், நாம், நிகழ்வுகளை இணைப்பதில், அவற்றில், இறந்த கால விளைவுகள், இறைவனின் பங்கு என்று பல்வேறு காரண, காரியங்களை சேர்ப்பதில், பல முயற்சிகள் எடுக்கிறோம்.

உயிரினங்கள் அனைத்திலும், பொருள் தேடும் ஒரே இனமான மனிதர்களாகிய நாம், நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றிற்கு, குறிப்பாக, துயர நிகழ்வுகளுக்கு எவ்விதம் பொருள் தர முயல்கிறோம் என்பதை, நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.