2017-01-17 15:11:00

கிர்கிஸ்தானில் விமான விபத்துக்கு திருத்தந்தை அனுதாபம்


சன.17,2017. அமைதி என்பது, மனித சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வாழ்வுக்காக, தொடர்ந்து, முழுவீச்சுடன் செயல்படுவதாகும் என்றும், இந்த அமைதிக்கு, மக்கள், தனிநபராகவும், சமுதாயமாகவும் ஈடுபடவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும், அழைக்கப்படுகின்றனர் என்றும், இச்செவ்வாயன்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

@Pontifex  என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில், பல்வேறு தலைப்புக்களில், சூழ்நிலைக்கேற்ப குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக, அனைவரும், ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.  

மேலும், கிர்கிஸ்தானின் முக்கிய விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், துருக்கிய சரக்கு விமானம் ஒன்று, இத்திங்களன்று விபத்துக்குள்ளானதில், அதில் பலியானவர்கள் குறித்து, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதில் இறந்தவர்கள், இறைவனின் நிறைசாந்தியை அடையவும், இவர்களின் குடும்பங்களுக்கும், நாட்டினருக்கும், இறைவன் ஆறுதல் அளிக்கவும், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு இறைவன் வலிமையை அளிக்கவும், செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் செபமும், ஆறுதலும் நிறைந்த தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார். 

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட, துருக்கி நாட்டு சரக்கு விமானம் ஒன்று, இஸ்தான்புல் நகரில் தரையிறங்குவதற்குமுன், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் Manas பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

Manas விமான நிலையத்துக்கு அருகிலிருந்த சிறிய கிராமத்தில், இந்த சரக்கு விமானம், விபத்துக்குள்ளானதில், அக்கிராமத்தில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன, கார்கள் நொறுக்கப்பட்டுள்ளன மற்றும், 37 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த விமானம், கிராமத்தில் மோதியபோது, பலர் உறங்கிக் கொண்டிருந்தனர் என்று, செய்திகள் கூறுகின்றன.

இத்துயர நிகழ்வை முன்னிட்டு, கிர்கிஸ்தானில், இச்செவ்வாய்கிழமையன்று, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இன்னும், கிறிஸ்துவின் பேரன்பே, நம்மை ஒப்புரவை நோக்கி உந்தித் தள்ளுகின்றது(cfr. 2 கொரி.5, 14-20)  என்ற தலைப்பில், சனவரி 18 இப்புதன் முதல், சனவரி 25, வருகிற புதன் வரை, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.