2017-01-17 15:45:00

கண்ணிவெடியை அகற்ற ஆளில்லா விமானம், குஜராத் மாணவர் சாதனை


சன.17,2017. நிலக்கண்ணிவெடிகளைப் பாதுகாப்பாக அகற்றும், ஆளில்லா சிறிய விமானம் ஒன்றை, குஜராத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை அகற்றும் பிரச்சனை மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளவேளை, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அகமதாபாத் பாபு நகரைச் சேர்ந்த, ஹர்ஷவர்தன் ஜாலா என்ற 14 வயது மாணவர் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழிக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்ணி வெடி தாக்குதலால் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் உயிரிழக்கும் செய்திகளைப் படித்த ஜாலா, அவர்களைக் காப்பாற்ற உறுதி பூண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும் படித்துக்கொண்டு, ஓய்வுநேரத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இது குறித்துப் பேசிய மாணவர் ஜாலா அவர்கள், முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் ரோபோக்களையே உருவாக்கினேன், ஆனால் அவை திருப்திகரமாக இல்லை, எனவே எனது தந்தை மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் மூன்று ஆளில்லா விமானங்களை வடிவமைத்தேன் என்று தெரிவித்தார்.

இந்த விமானம், இரண்டு அடி உயரத்தில் பறக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதனை எளிதாக இயக்கலாம். ஒவ்வொரு விமானத்திலும் 21 மெகாபிக்சல் கொண்ட புகைப்படக் கருவியைப் பொருத்தியுள்ளேன். இதன்மூலம் தெளிவான புகைப்படம், வீடியோ எடுக்க முடியும். மேலும், லேசர் அலைகளை உமிழும் கருவிகளையும் பொருத்தியுள்ளேன் என்றும் கூறியுள்ளார் ஜாலா.

இவ்விமானத்தின் உதவியுடன், ஏறக்குறைய எட்டு சதுர அடி பரப்பளவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும் எனவும், விமானத்தில், ஐம்பது கிராம் எடையிலான வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல முடியும் எனவும், கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள இடத்தின்மீது ஆளில்லா விமானம் வெடிகுண்டை வீசும். இதன்மூலம் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யப்படும் எனவும் விளக்கினார் மாணவர் ஜாலா.

சிறுவயது முதலே ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மாணவர் ஜாலா, கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மூன்று விதமான ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கியுள்ளார். இதில் 2 விமானங்களைத் தயாரிக்க, அவரது தந்தை இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கினார். மாணவரின் திறமையை அறிந்த மாநில அரசு, மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவியை அளித்தது. அதன்மூலம், மேம்படுத்தப்பட்ட மூன்றாவது ஆளில்லா விமானத்தை ஜாலா உருவாக்கியுள்ளார்.

ஹர்ஷவர்தன் ஜாலா, தனது ஆளில்லா விமானத்தின் செயல்பாடு குறித்து அகமதாபாதில் அண்மையில் நடந்த, ஒரு பன்னாட்டு மாநாட்டில் செயல் விளக்கம் அளித்தார். அவரது கண்டுபிடிப்பு குறித்து, முழு திருப்தி தெரிவித்த மாநில அரசு, ஜாலாவுடன் ஐந்து கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.