2017-01-17 15:54:00

இந்தியாவில் 57 பேரிடம் 70 விழுக்காடு சொத்து


சன.17,2017. இந்தியாவில் உள்ள 57 கோடீஸ்வரர்களிடம் மட்டும், நாட்டில் உள்ள மொத்த சொத்தில் 70 விழுக்காடு இருப்பதாக, அண்மை ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பின்கீழ் இயங்கும் ஆக்ஸ்பாம் (Oxfam) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், இந்தியாவில் ஒரு விழுக்காடு செல்வந்தர்களிடம், நாட்டில் உள்ள மொத்த செல்வத்தில் 58 விழுக்காடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஏழைகள், மேலும் ஏழைகளாக மாறுவார்கள் எனவும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா, இந்தோனேசியா, இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள 10 விழுக்காடு பணக்காரர்களின் வருமானம், 15 விழுக்காட்டிற்கு அதிகமாக உயர்ந்துள்ளது எனவும், அதேநேரம், 10 விழுக்காடு ஏழைகளின் வருமானம் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஊதிய இடைவெளி விகிதம் 30 விழுக்காடு வரை, அதிகமாக வாய்ப்பு உள்ளது எனவும், இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில், 60 விழுக்காட்டுப் பெண்கள், சம வேலை செய்யும் ஆண்களைவிட, குறைவான ஊதியம் பெறுவதாகவும், 15 விழுக்காடு பெண்கள் மட்டுமே அதிக ஊதியம் பெறுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.