2017-01-17 15:37:00

இந்திய கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து உழைக்க தீர்மானம்


சன.17,2017. இந்தியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைச் சமாளிக்கவும், இந்தியாவின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானித்துள்ளனர்.

சனவரி 18, இப்புதனன்று துவங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரக் கொண்டாட்டங்களுக்கு முன்னர், மத்திய பிரதேசத்தின் டமோ எனுமிடத்தில் கூடிய 3,600 இந்திய கிறிஸ்தவத் தலைவர்களும், 260 வெளிநாட்டு கிறிஸ்தவத் தலைவர்களும், விவாதித்ததில், இந்தியாவில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும், தங்களின் வளங்களைப் பகிர்ந்துகொண்டு ஒன்றிணைந்து உழைக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ள கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒன்றிணைந்த பணி இன்றியமையாதது என்றார் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்தவப் போதகர் R.D. Lall.

கோவில்கள் தாக்கப்படுவது, மத போதகர்கள் அச்சுறுத்தப்படுவது, மற்றும், கிராமப்புற கிறிஸ்தவர்கள் மதம்மாற கட்டாயப்படுத்தப்படுவது போன்ற அண்மைக்கால நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய கிறிஸ்தவ சபைகள், தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்து, தங்கள் திறமைகளையும் வளங்களையும் பகிர்ந்துகொள்வதே கிறிஸ்தவ சபைகளுக்கும் சமூகங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர் இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்தில் கலந்துகொண்டோர்.

மறைப்பணிகளுக்கான இந்த அனைத்துலக கூட்டம், தற்போது 19வது ஆண்டாக இடம்பெற்றது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.