2017-01-16 16:45:00

இயேசுவை உலகுக்கு காட்டும் பணியே திரு அவையினுடையது


சன.,16,2017. இயேசுவை உலகுக்கு எடுத்துரைக்கும் புனித திருமுழுக்கு யோவானின் பணியை ஆற்றவே, ஒவ்வொரு காலத்திலும் திருஅவை அழைப்புப் பெறுகிறது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை விட்டுவிட்டு, தன்னைத்தானே அறிவிக்க முயலும் திருஅவை, தன் திசைமானியை இழந்ததாய், எங்கு செல்வதென்று அறியாமல் அலையும் நிலைக்கு உள்ளாகும் என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை, தன்னைத்தானே அறிவிக்கவுமில்லை, தன்னையேக் கொணர்வதுமில்லை, மாறாக இயேசுவை அறிவித்து, அவரையே மக்களுக்குக் கொணர்கின்றது என்றார்.

‘இவரே கடவுளின் செம்மறி. உலகின் பாவங்களைப் போக்குபவர்' என இயேசுவை நோக்கி, புனித திருமுழுக்கு யோவான் கூறும் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 30ம் வயதில் பொது வாழ்வில் நுழைந்த இயேசு, அவரின் முதல் நடவடிக்கையாக, பாவிகளுடன் இணைந்து நின்று, திருமுழுக்குப் பெறுவதைக் காண்கிறோம், என்றார்.

இயேசுவில் மெசியாவைக் கண்டுகொண்ட புனித திருமுழுக்கு அருளப்பர், அவரைக் குறித்து அறிவித்ததுபோல், திருஅவையும் எல்லாக் காலத்திலும் அதே பணியை ஆற்ற அழைப்புப் பெற்றுள்ளது என்றார் திருத்தந்தை.

இயேசு ஒருவரே மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து மீட்டு, உண்மையான விடுதலையின் பூமி நோக்கி வழி நடத்திச் செல்கிறார் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனாலேயே, அவரையே அறிவித்து அவரை உலகுக்கு காண்பிக்க திருஅவை அழைப்புப் பெற்றுள்ளது என்றார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.