2017-01-16 17:04:00

இந்தியாவில் ஓராண்டில் காற்று மாசுக்கேட்டிற்கு 12 இலட்சம் பலி


சன.,16,2017. இந்தியாவில் காற்று மாசுக் கேட்டால் ஒவ்வோர் ஆண்டும் 12 இலட்சம்பேர் உயிரிழப்பதாக Green Peace அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் காற்று மாசுக்கேட்டால் 3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, இந்தியாவில் காற்று மாசுக்கேடு குறித்து ஆய்வு செய்யப்பட்ட 168 நகர்களுள் ஒன்றில்கூட, காற்றின் தரம், எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை என தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட இந்தியாவின் ' மரங்களின் நண்பர்கள்' அமைப்பின் நிறுவனர், இயேசு சபை அருள்பணி இராபர்ட் அத்திக்கல் அவர்கள், தனியார் அளவிலும், சமூக அளவிலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இதற்கிடையே, இந்தியாவில் மண், தண்ணீர், மற்றும், காற்றின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வறிக்கைகளை அரசு வெளியிட்டு, மக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவவேண்டும் என இந்திய திரு அவைத் தலைவர்கள் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.