2017-01-14 14:56:00

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - பொங்கல் திருவிழா - ஞாயிறு சிந்தனை


தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்களாகிய நாம், பொங்கல் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். இறைவனின் கருணையால், இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து, நமக்குக் கொடுத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது. பல உயர்வான எண்ணங்கள் நம் மனங்களை நிறைத்தாலும், இந்த அறுவடைத் திருநாள் சில நெருடல்களையும் உருவாக்கத் தவறவில்லை.

சேற்றில் இறங்கி, வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தங்கள் உழைப்பிற்கேற்ற பலனை அறுவடை செய்து, வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்களா? உழைப்பிற்கேற்ற பலனை அவர்கள் அனுபவிக்காமல், விரக்தியின் எல்லைக்கு அவர்களைத் தள்ளும் சக்திகள் எவை?

தமிழர்களின் வீர விளையாட்டாக தொன்று தொட்டு நடத்தப்படும் 'ஜல்லிக்கட்டு' பந்தயத்தை, பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு முடக்குவதற்குக் காரணம்தான் என்ன?

கடந்த சில ஆண்டுகளாய் தமிழகத்தை, டிசம்பர், சனவரி மாதங்களில் இயற்கை இடர்கள் தொடர்ந்து வாட்டியெடுக்கின்றன. 'தானே' புயல், சென்னை வெள்ளம், 'வார்தா' புயல், தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வறட்சி என்று, தொடர்ந்து வரும் இந்த இடர்களுடன், இவ்வாண்டு, பணத்தட்டுப்பாடு என்ற கூடுதல் கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இத்தருணத்தில், பொங்கல் திருநாளை ஒரு விடுமுறை நாளென அறிவிக்கவும் இந்திய அரசு தடை விதித்தது, எரியும் நெருப்பில் ஊற்றும் எண்ணெய் போல் தெரிந்தது.

பொங்கிவரும் மகிழ்வில் நீர் தெளித்து அடக்கிவிடும் இந்த நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில், நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு, இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

பொங்கல் விழாவின் முக்கியக் காரணம் அறுவடை. பொருள்செறிந்த அறுவடைத் திருநாளையொட்டி வரும் இஞ்ஞாயிறு வழிபாடு, இரு வேறு துருவங்களாய் தெரியும் சிந்தனைகளை நம்முன் வைக்கிறது. நல்ல நிலங்களில் வளரும் பயிர்களைப் போல, பாதுகாப்பானச் சூழல்களில் வளர்ந்து, நாம் எவ்விதம் நமக்கும், பிறருக்கும், பயன்தரும் கருவிகளாக மாறமுடியும் என்ற அழகான எண்ணங்களை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம் உள்ளத்தில் விதைக்கின்றன. இது ஒரு துருவம்.

இதற்கு நேர்மாறான துருவமாக, விதைக்கப்படவும், வேரூன்றவும் நிலமின்றி, பதர்களைப் போல, சருகுகளைப் போல அலைந்து திரியும் மக்களை, குறிப்பாக, இம்மக்களில் மிகவும் வலுவற்றவர்களான குழந்தைகளை எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. சனவரி 15, இஞ்ஞாயிறன்று, குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1914ம் ஆண்டு திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக நாள், கத்தோலிக்கத் திருஅவையில் இவ்வாண்டு, 103வது முறையாக கடைபிடிக்கப்படுகிறது.

தாய்நாட்டில் தங்கள் சுய அடையாளங்களை இழந்து, தஞ்சம்புகும் நாடுகளிலும், அன்னியர்களாக, அடையாளங்கள் ஏதுமின்றி, அல்லது, தவறான அடையாளங்களுடன் வாழவேண்டிய கொடுமைக்கு உள்ளாகும் மக்களை எண்ணிப்பார்ப்பது, நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள, சவாலான மற்றொரு துருவம். இவ்விரு துருவங்களையும் இணைத்துச் சிந்திக்க, இறைவன், இஞ்ஞாயிறு வழிபாடு வழியாக நம்மை அழைக்கிறார்.

நமக்கே உரித்தான அடையாளங்களைப் புரிந்துகொள்வதைப்பற்றிச் சிந்திக்கும்போது, வலைத்தளத்தில் வலம் வரும் ஓர் அற்புதமான கதை நினைவுக்கு வருகிறது. Value What You Have - அதாவது, உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக என்ற தலைப்புடன் வெளியான அச்சிறுகதை இதோ:

Olavo Bilac என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடிவந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஇடம் கேட்டுக்கொண்டார். Bilac பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:

"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழலும், அமைதியும் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.

ஒரு சில வாரங்கள் சென்று தன் நண்பரைச் சந்தித்த Bilac, "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நல வாழ்வு அமையும். நம்மிடம் உள்ள உண்மையான கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், தூரத்துக் கானல்நீரை துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நாம் வீணாக்குகிறோம். நம் உண்மை அடையாளங்களுடன் வாழ்வதற்குப்பதில், அவரைப்போல், இவரைப்போல் என்று போலி முகமூடிகளை அணிந்து வாழ முயல்கிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான, மாயைகளைப் பெறுவதற்கு, நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலைபேசுகிறோம். நம் குடும்ப உறவுகள், தொழில், நண்பர்கள் என்று, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம். நாம் நாமாகவே வாழ்வதற்கு, நம்மைப்பற்றிய தெளிவு முதலில் நமக்கு வேண்டும். இந்தத் தெளிவு நம்மைப்பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள் உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்குமுன், நமது பார்வையில் நாம் மதிப்புப் பெறவேண்டும். நமது பார்வையில், இறைவன் பார்வையில் நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை, இறைவாக்கினர் எசாயாவைப் போல், நாமும், நெஞ்சுயர்த்திச் சொல்லவேண்டும்.

இறைவாக்கினர் எசாயா 49: 1,5

கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்... ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்.

ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான், அடுத்தவரையும் நம்மால் மதிக்கமுடியும். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான், இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு, யோவான், தான் என்ற அகந்தை கொண்டு, நிலைதடுமாறவில்லை. தன் உண்மையான நிலை, தன் மதிப்பு அனைத்தும் இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்மட்டுமே அடங்கியுள்ளது என்று, தன்னைப்பற்றியத் தெளிவு யோவானுக்கு இருந்தது. தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்கு உரிமையாளர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை அந்த உரிமையாளர் பக்கம் திருப்பினார் திருமுழுக்கு யோவான். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

யோவான் நற்செய்தி 1: 29,34

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்... இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”

தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்வதற்கு, தன்னம்பிக்கையும், தன்னைப்பற்றியத் தெளிவும் தேவை. இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் ஒரு போலியான தாழ்ச்சி தெரியும். அரசியல் உலகில் அரங்கேறிவரும் தாழ்ச்சியைக் கண்டு, தன்மானம் உள்ள எந்த மனிதரும் தலைகுனிய வேண்டியுள்ளது. தன்னைப்பற்றியத் தெளிவான எண்ணங்களும், தன்னைப்பற்றிய சரியான மதிப்பும் கொண்டிருந்தால் மட்டுமே, அடுத்தவரை உயர்வாக எண்ணமுடியும், மதிக்கமுடியும்.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவைச் சுட்டிக்காட்டி, புகழுரைகள் சொன்னார். இயேசுவும், திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகச்சிறந்த புகழுரை வழங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு நற்செய்தி 11: 11) என்று இயேசு கூறினார். இயேசுவும், யோவானும், ஒருவரையொருவர் புகழ்ந்துகொண்டது, வெறும் முகத்துதி அல்ல. இருவரும் தங்களை உள்ளூர உயர்வாக மதித்தவர்கள், எனவே அவர்களால் அடுத்தவரின் உயர்வையும் மனதார உணரமுடிந்தது. வாயாரப் புகழமுடிந்தது.

இதுவரை நாம் சிந்தித்தது... இந்த ஞாயிறு வழிபாடு, நம் முன் வைத்துள்ள முதல் துருவம். இனி, இரண்டாவது துருவம்...

தங்கள் சுய மாண்பை இழந்து, அடுத்தவர்களால் இகழப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குடியேற்றதாரரையும், புலம் பெயர்ந்தோரையும் எண்ணிப்பார்க்க தாய் திருஅவையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நம்மை இந்த ஞாயிறு அழைக்கின்றனர். சனவரி 15, இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும், குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் 103வது உலக நாளையொட்டி, திருத்தந்தை அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். "காயப்படுவதற்கு ஏதுவான, குரல் எழுப்ப இயலாத, இளம் குடியேற்றதாரர்கள்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள அச்செய்தியிலிருந்து ஒரு சில வரிகளை எண்ணிப்பார்ப்பது பயனளிக்கும்:

"என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது." (மத்தேயு 18:6) நற்செய்தியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கையை நாம் எவ்விதம் புறக்கணிக்க முடியும்? சிறுவர், சிறுமியருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடுமைகளைப் பார்க்கும்போது, எவ்விதம் ஒதுங்கிச் செல்லமுடியும்?

இந்த உலக நாளன்று, குடிபெயர்ந்து வாழும் குழந்தைகள்மீது நம் கவனம் திரும்பவேண்டும் என்று விழைகிறேன். தங்கள் சொந்த நாட்டையும், குடும்பத்தையும் விட்டு பிரிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியருக்கு உதவிகள் செய்யும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தைப் பருவத்திற்கே உரிய மறுக்கமுடியாத உரிமைகள் உள்ளன. பாதுகாப்பான ஒரு குடும்பத்தில் வளர்வது, தேவையான கல்வி பெறுவது, ஓடியாடி விளையாடுவது, நல்ல உடல் நலத்துடன் வளர்வது என்ற உரிமைகளை, குழந்தைகளிடமிருந்து பறிக்க, யாருக்கும் அதிகாரம் கிடையாது.

இருப்பினும், புலம்பெயர்தல், குடிபெயர்தல் என்ற கொடுமைகளுக்கு உள்ளாகும் மக்களில், குழந்தைகள், மிக எளிதாகக் காயப்பட ஏதுவானவர்களாக உள்ளனர். சக்தியற்ற, குரல் எழுப்ப இயலாத இக்குழந்தைகள், சொல்ல முடியாத கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள், இவர்களது வருங்காலத்தை அழித்துவிடுகின்றன.

இக்குழந்தைகளைக் காப்பதற்கு, அவர்களை, சமுதாயத்தில் முழுமையாக இணைப்பதற்கு, புலம்பெயர்தல் என்ற கொடுமையை உருவாக்கும் பிரச்சனைகளை வேரோடு களைவதற்கு, நாம் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும்.

சொந்த நாட்டையும், அடையாளத்தையும் இழந்து, உலகில் அலையும் மக்கள், குறிப்பாக, குழந்தைகள், தங்கள் தாயகம் திரும்பி, நலமுடன், மாண்புடன் வாழும் வழிகள், உலக நாடுகள் அனைத்திலும் உருவாகவேண்டும் என்று சிறப்பாகச் செபிப்போம்.

'பொங்கல் சாட்சி' என்ற தலைப்பில், பொங்கல் பெருநாளையும், இந்த ஞாயிறையும் இணைத்து, அருள்பணி இயேசு கருணா அவர்கள் அழகிய சிந்தனைகளை வழங்கியுள்ளார். அவரது சிந்தனைகளில், 'திருவிழா' என்ற சொல், 'விழாதிரு' என்ற சொல்லிலிருந்து உருவானதோ என்று, அழகாகக் கூறியுள்ளார். மனிதர்கள் 'விழாதிரு'க்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி உழைக்கும் உழவர்கள், இயற்கை இடர்கள், அரசுகளின் அராஜகம், பன்னாட்டு முதலைகளின் பசி என்ற பல இன்னல்களால் தாக்கப்பட்டாலும், 'விழாதிரு'க்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மதிப்பை முதலில் நமக்குள் நாமே வளர்த்துக்கொண்டு, பிறருக்கும் அவரவருக்குரிய மதிப்பை வழங்க ஆரம்பித்தால், உலகம் மதிப்பு பெறும், மீட்பு பெறும். மதிப்பை விதைப்போம். மாண்பை அறுவடை செய்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.