2017-01-14 15:51:00

திருத்தந்தை : பொருளாதாரத்தின் மையமாக மனிதரை வையுங்கள்


சன.14,2017. "Global Foundation" என்ற ஓர் உலகளாவிய அமைப்பு, உரோம் நகரில் நடத்திய ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்ட, 85 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில், சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகத் தாராளமயமாக்கலின் புறக்கணிப்புப் போக்குக்கு எதிராகச் செயல்படும், இந்த அமைப்பின் குறிக்கோளைப் பாராட்டிப் பேசினார்.

பயனற்றவர்கள் அல்லது உற்பத்தித் திறனற்றவர்கள் என்று, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரைப் புறக்கணிக்கும், ஓர் உலகளாவிய பொருளாதார அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்ற தனது உறுதிப்பாட்டை, மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள் மீது காட்டப்படும் அக்கறையற்ற இத்தகைய போக்கு, எந்த ஒரு பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பில், பின்னடைவும், மனிதமற்ற பண்பும்  காணப்படுவதன் அடையாளமாக உள்ளது என்றும் கூறியத் திருத்தந்தை, புறக்கணிக்கப்படும் மனிதர்கள், ஆன்மா இல்லாத கருவிகளாக மாறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அடக்குமுறை அரசியல் அமைப்புகளின் வீழ்ச்சி மற்றும், சந்தைகளை ஒன்றிணைப்பதற்கு அதாவது, உலகத் தாராளமயமாக்கலை கொண்டுவர எடுக்கப்பட்ட தீவிர முயற்சி பற்றி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எச்சரித்தது குறித்தும் சுட்டிக்காட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளின் தேவைகள் மீது காட்டப்படும் புறக்கணிப்புகள் களையப்பட வேண்டும் என்றும், அடக்குமுறை, தனிமை, கட்டாயப் புலம்பெயர்தல் மற்றும் இதனால் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுபவர்கள் மீது இரக்கம் காட்டப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

உலகத் தாராளமயமாக்கலில் கூட்டுமுயற்சியைச் செயல்படுத்த விரும்பும் Global Foundation" அமைப்பினர், தங்களின் நடவடிக்கைகளில், திருஅவையின் சமூகப் போதனைகளிலிருந்து தூண்டுதல் பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Global Foundation என்ற உலகளாவிய அமைப்பு, 1998ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு, இக்கால உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைச் சந்திப்பதற்கு, தொழில், வர்த்தகம், சட்டம், கொள்கை அமைப்பாளர்கள் என, பல்வேறு துறைகளின் பொதுநிலைத் தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.