2017-01-13 16:23:00

காவல்துறையினர் பேதுரு வளாகத்தின் காவல்தூதர்கள்


சன.13,2017. வத்திக்கான் பகுதிகளில், பாதுகாப்புப் பணிகளையாற்றிவரும் இத்தாலிய காவல்துறையினர், ஒருவகையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தின் காவல்தூதர்கள் என்று, பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இத்தாலிய காவல்துறையினரை (Polizia di Stato), திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில், இவ்வெள்ளியன்று சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காவல்துறையினரின் திறமைமிக்க பணிகளுக்கு, அதிலும், குறிப்பாக, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

அண்மையில் நாம் சிறப்பித்துள்ள கிறிஸ்மஸ், இறைமகன், தம்மை தாழ்த்தியதையும், அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பையும் வெளிப்படுத்தியது என்றுரைத்த திருத்தந்தை, அளவிட முடியாத இந்த அன்பு, நாம் நம் சகோதரரை ஏற்கவும், மன்னிக்கவும், ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளவும் தொடர்ந்து நமக்கு விடுக்கும் அழைப்பாக உள்ளது என்று கூறினார்.

இந்த அழைப்பை வாழ்வதன் வழியாக, பெத்லகேமில் நன்மனம் கொண்ட மனிதர்க்கு வானதூதர்கள் அறிவித்த அமைதியை, நாமும், நம் இதயத்தில் அனுபவிப்போம் என்று சொல்லி,  இக்காவல்துறையினருக்கு, மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்து, ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் நாட்டிற்குக் காவல்துறையினர் (Gendarmerie Corps) இருந்தபோதிலும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பாதுகாப்புப் பணிகளுக்கு, இந்த இத்தாலிய காவல்துறை உதவி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.