2017-01-13 16:37:00

இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாடு


சன.13,2017. ஒவ்வொரு மனிதரின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், குற்றங்கள் இழைத்தவர் உட்பட, அனைவரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும், மற்றும், ஊகத்தின் அடிப்படையில் இடம்பெறும், சட்டத்திற்குப் புறம்பேயான கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

பிலிப்பீன்ஸின் மனிலாவில், சனவரி 16, வருகிற திங்களன்று தொடங்கும், இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாடு (WACOM  IV) பற்றி, செய்தியாளர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று விளக்கிய, லுசோன் மத்திய மாநிலத்திலுள்ள, பலாங்கா ஆயர் Ruperto Santos அவர்கள், இம்மாநாடு இறை இரக்கப் பக்தி பற்றி மட்டுமல்லாமல், பிலிப்பீன்ஸ் நாடு தற்போது எதிர்கொண்டுவரும் மனித உரிமை நெருக்கடிகள் பற்றியும் கலந்துரையாடும் என்று கூறினார்.

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte மற்றும், அவரது அரசால், தற்போது நடத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் பலியாகுபவர்கள் குறித்தும் பேசினார் ஆயர் Santos.

இரக்கம், வாழ்வோடும், வாழ்வு சுற்றுச்சூழலோடும் தொடர்பு கொண்டுள்ளன என்றும், எப்போதும் வாழ்வை அன்புகூர்ந்து, அதை வாழ்ந்து, அதைப் பாதுகாக்க வேண்டுமென்றும், இந்த மாநாட்டில் வாழ்வு பற்றிய சாட்சியங்கள் வழங்கப்படும் என்றும் ஆயர் தெரிவித்தார்.  

இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாடு, மனிலாவில் சனவரி 16 முதல், 20 வரை, நடைபெறும். இதில் ஏறக்குறைய நான்காயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரக்கம் பற்றிய உலக திருத்தூது மாநாடு, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.   

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.