2017-01-12 16:23:00

புனிதர் நிலைக்கு உயர்த்த இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகள்


சன.12,2017. கடந்த 10 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையில், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பரிந்துரைகளில் பெரும்பான்மையானவை, இத்தாலி நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்த பணியில் ஈடுபட்டுள்ள பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இந்த வழிமுறைகள் பற்றி வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பாசறையில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்து, சனவரி 9ம் தேதி, இத்திங்கள் முதல் இரு மாதங்களுக்கு வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்கு துவக்க உரை வழங்கிய கர்தினால் அமாத்தோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் மிகுந்த கவனத்துடன் வகுக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

2006ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில், புனிதர் நிலை பேராயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 351 பரிந்துரைகளில், 139 பரிந்துரைகள், அதாவது, 40 விழுக்காடு பரிந்துரைகள் இத்தாலியிலிருந்து வந்துள்ளன என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

43 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகளில், இத்தாலியிலிருந்து 139, ஸ்பெயின் நாட்டிலிருந்து 60, போலந்து நாட்டிலிருந்து 22, பிரேசில் நாட்டிலிருந்து 13 பரிந்துரைகள் வந்திருப்பதை, கர்தினால் அமாத்தோ அவர்கள் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளில், இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகளும், தென் கொரியாவிலிருந்து 2, மியான்மாரிலிருந்து 2, சிங்கப்பூரிலிருந்து 1 என்ற எண்ணிக்கையில், புனிதர்கள் குறித்த பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு, 10 முறை, புனிதர் பட்ட நிகழ்வுகளும், 14 முறை அருளாளர்களாக உயர்த்தப்படும் நிகழ்வுகளும் நடைபெற்றன என்பதும், புதிய புனிதர்கள், ஆல்பேனியா, அர்ஜென்டீனா, மெக்சிகோ, பிரான்ஸ், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், சுவீடன் ஆகிய எட்டு நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.