2017-01-12 15:33:00

பாசமுள்ள பார்வையில் : தூணின் அன்னை மரியா


இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள், பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியாரைப் பெற்ற பின்னர், உலகின் பல இடங்களுக்கும் நற்செய்தி அறிவிக்கச் சென்றனர். கி.பி. 40ம் ஆண்டில், திருத்தூதர் யாகப்பர் (James the Greater), அக்காலத்திய உரோமைப் பேரரசின் இஸ்பானிய மாநிலமான சரகோசாவில் (Zaragoza) நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரின் போதனையைக் கேட்டு, வெகு சிலரே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இதனால் யாகப்பர் மிகவும் மனம் சோர்வடைந்திருந்தார். அவ்வாண்டில், அக்டோபர் 12ம் நாளன்று, சில சீடர்களுடன், எப்ரோ (Ebro) ஆற்றங்கரையில், அவர் செபித்துக்கொண்டிருந்தார். அப்போது, அன்னை மரியா குழந்தை இயேசுவுடன், ஒரு கற்பாறைத் தூணின் உச்சியில், வானதூதர்கள் புடைசூழ அற்புதமாகக் காட்சியளித்தார். மக்கள் விரைவில் மனம்மாறுவார்கள் என்றும், அவர்களின் விசுவாசம், தான் நிற்கும் இந்தக் கற்பாறை போன்று உறுதியாக இருக்கும் என்றும், அன்னை மரியா, யாகப்பருக்கு ஆறுதல் சொன்னார். அதற்கு அடையாளமாக அந்தத் தூணையும், மரத்தாலான தனது உருவம் ஒன்றையும் அன்னை மரியா யாகப்பரிடம் கொடுத்தார். மேலும், அந்த இடத்தில், தனக்கென ஓர் ஆலயம் கட்டுமாறும் கேட்டுக்கொண்டு, அவ்விடத்தைவிட்டு மறைந்தார் அன்னை மரியா. அந்த இடத்தில் ஆலயம் கட்டியபின், யாகப்பர் எருசலேம் சென்று, கி.பி.44ம் ஆண்டில், ஏரோது அக்ரிப்பா அரசன் காலத்தில், தலைவெட்டப்பட்டு மறைசாட்சியாக உயிர் நீத்தார். திருத்தூதர் யாகப்பரின் உடலை அவரின் சீடர்கள் இஸ்பெயினுக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்தனர் என்று பாரம்பரியம் கூறுகிறது. திருஅவை வரலாற்றில், அன்னை மரியா அளித்த முதல் காட்சி இதுவாகும். இந்த அற்புத அன்னை, தூணின் அன்னை மரியா என்று அழைக்கப்படுகிறார். இஸ்பானிய உலகின் பாதுகாவலராகப் போற்றப்படுபவர், தூணின் அன்னை மரியா. இவர் அளித்த திருவுருவம், சரகோசா பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. 1905ம் ஆண்டு மே 20ம் தேதி, திருத்தந்தை புனித 10ம் பத்திநாதர், இதற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமளித்தார். இஸ்பானிய உள்நாட்டுக் கலவரத்தின்போது, மக்களுக்குப் பெரிதும் உதவிய தூணின் அன்னை மரியா, இன்றும், பல புதுமைகளை ஆற்றி வருகிறார். மரத்தாலான தூணின் அன்னை மரியா உருவம் 39 செ.மீ. உயரமுடையது. இஸ்பெயினில், யாகப்பருக்கு காட்சியளித்தபோது, அன்னை மரியா உயிரோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னை மரியா, கேட்டவர்க்கு கேட்ட வரம் தரும் தாயாக, எந்நாளும் இருந்து வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.