2017-01-11 15:43:00

பாசமுள்ள பார்வையில்… மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?


திருவிழாவுக்கு வந்த இடத்தில், தங்களுடன் ஊருக்குத் திரும்பாமல், வந்த இடத்திலேயே தங்கிவிட்ட மகனைப் பார்த்து, பதட்டத்துடன் கேட்கிறார் தாய் இந்த கேள்வியை. ஏன் இப்படிச் செய்தாய், என்பது தாயின் பதட்டமான கேள்வி. ‘என் தந்தையின் அலுவல் தொடர்பாக நான் இங்கு இருந்துவிட்டேன்’ என்பது மகன் தன்னை வெளிப்படுத்திய பதில். லூக்கா நற்செய்தியில் நாம், தாய்க்கும் மகனுக்குமிடையேயான இந்த முதல் உரையாடலைக் காண்கிறோம். பதட்டமான ஒரு சூழலில் துவங்கியிருந்தாலும், தங்களையும் அறிஞர்களையும் தன் அறிவுத்திறனால் வியப்பிலாழ்த்திய நிகழ்வைக் கண்டபின்தான் இந்த கேள்வியைக் கேட்கின்றார் தாய். இயேசுவைப் பற்றிய உண்மையை அவர் வாயிலிருந்தே வெளிப்படுத்துவதற்கு உதவும் கேள்வியாக, அது இருந்தது எனலாம். ஆனால், இதே கேள்வியை இன்று எத்தனையோ தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளைப் பார்த்து கேட்கும் சூழ்நிலைகளை எண்ணிப் பார்ப்போம். அதில் அடங்கியிருக்கும் சோகம் எவ்வளவு தூரம் நம்மை வதைக்கிறது என சிந்தித்துப் பார்ப்போம். ‘இவ்வளவு பாசம் காட்டி வளர்த்த எங்களுக்கா இதைச் செய்தாய்?’ ‘உனக்காக இரவு பகலாக கண் விழித்து உழைத்த எங்களுக்கு இதைச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது?’ ‘குடும்பப் பெயரை ஏன் இப்படிக் கெடுத்தாய்?’ இப்படி இன்று எத்தனையோ அன்னையர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கேட்கின்றார்கள் என்றால், எப்படி இத்தகைய ஒரு நிலைக்கு மனித சமூகம் இறங்கி வந்தது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டாமா? ஆனால், அதேவேளை, இன்றைய ஒவ்வொரு குழந்தையும் தன் தாயை நோக்கி, 'அம்மா! நீங்கள் எனக்கு இவ்வளவு தூரம் நல்லவை ஆற்ற, நான் என்ன தவம் செய்தேன்?' என்று கேட்டுப் பெருமைப்படுத்தினால், உலகம் எப்படியிருக்கும்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.