2017-01-11 16:41:00

சிறார்க்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க இணையதளம் வழி முயற்சி


சன.11,2017. இந்திய சமுதாயத்தில், 37 விழுக்காடாக இருக்கும் சிறார் முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தும் இணையதள நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

வருகிற மாதத்தில், வரவுசெலவு திட்ட அறிக்கை அறிவிக்கப்படவுள்ளவேளை, charge.org என்ற இணையதள முகவரியில், மத்திய அரசை வலியுறுத்தும் மனு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை குறித்து, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, கத்தோலிக்க சமூகநலப் பணியாளர் Jugal Kishore Ranjit அவர்கள், சிறாரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்பதால், இதற்கு ஆதரவு தெரிவிப்பது நல்லது என்று கூறினார்.

இந்தியாவின் 2017-18ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், சிறாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை, இந்த இணையதள நடவடிக்கை வலியுறுத்துகிறது.

120 கோடி மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில், சிறார், ஏறக்குறைய 44 கோடியே 20 இலட்சம். இச்சிறாரில், எட்டு கோடிப் பேர் பள்ளிக்குச் செல்லாதவர்கள். 3 இலட்சத்து 60 ஆயிரம் பேர் கல்வியறிவற்றவர்கள். 9 கோடியே 70 இலட்சம் பேர், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுள்ளவர்கள். 75 இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்தியாவில், ஆயிரம் சிறுவர்களுக்கு, 908 சிறுமிகள் வீதம் உள்ளனர் என, புள்ளி விபரங்கள் கூறுகின்றன.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.