2017-01-11 16:23:00

சமயச் சார்பின்மை, ஐரோப்பிய சமுதாயத்தை பலவீனப்படுத்துகின்றது


சன.11,2017. சமயச் சார்பற்றபோக்கு, ஐரோப்பிய சமுதாய வாழ்வைப் பலவீனப்படுத்தி, பாதுகாப்பின்மையையே, கொணர்கிறது என்று, புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், ஒரு ஐரோப்பிய கருத்தரங்கில் கூறினார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள பயத்திலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்றுதல் மற்றும், மனிதரின் மதிப்பும், சமய சுதந்திரமும் என்ற தலைப்பில், பாரிசில் நடைபெறும், ஐரோப்பிய ஆர்த்தடாக்ஸ்-கத்தோலிக்க கருத்தரங்கில் உரையாற்றிய, கர்தினால் எர்டோ அவர்கள், இவ்வாறு கூறினார்.

பதட்டநிலைகளைக் களைவதற்கு, கடவுளைப் புறக்கணிப்பது, எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது என்றும் கூறிய கர்தினால் எர்டோ அவர்கள், அடிப்படைவாத அச்சுறுத்தல்களுக்கும், தனிமனிதக் கோட்பாட்டுக்கும், நுகர்வு சமுதாயத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறினார்.

நம்மை அச்சுறுத்துபவர் யார்?, யாரை அது பாதிக்கின்றது?, மனித மாண்பை மதித்து, அதன்மீது அக்கறை காட்டாதவர் யார்? போன்ற கேள்விகளை முன்வைத்த கர்தினால் எர்டோ அவர்கள், இளையோரில் மாற்றத்திற்கான ஆவல் தென்படுகிறது, இது, பிறர்மீது வெறுப்பை அல்ல, ஆனால், இயேசு கற்றுக்கொடுத்த அன்பை விதைப்பதற்கான ஆவல் எனவும் கூறினார்.

சனவரி 9, இத்திங்களன்று தொடங்கிய இக்கருத்தரங்கு, சனவரி 12, இவ்வியாழனன்று நிறைவடையும்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.