2017-01-11 16:31:00

சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்க கத்தோலிக்கருக்கு அழைப்பு


சன.11,2017. குடியேற்றதாரர்கள் மீது, பரிவும், பிறரன்பும் காட்டும் சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு கத்தோலிக்கர்கள் உழைக்க வேண்டும் என்று அமெரிக்க ஆயர் பேரவை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

சனவரி 8 கடந்த ஞாயிறு முதல், 14, வருகிற சனிக்கிழமை முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவை சிறப்பித்துவரும் தேசிய குடியேற்ற வாரத்தையொட்டி, ஆயர்கள் விடுத்துள்ள இந்த அறிக்கை, 'சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்க' என்ற மையக்கருத்தைக் கொண்டுள்ளது.

அமைதியைத் தேடி, தங்களுக்குள்ள அனைத்தையும் இழப்பதற்குத் தயாராகும் குடியேற்றத்தாரர் மேற்கொள்ளும் போராட்டங்களில் ஓரளவாகிலும் பங்கேற்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று, அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் தினார்தோ அவர்களும், துணைத்தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்களும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாடு, குடியேறாதாரர்களால் உருவாக்கப்பட்ட நாடு என்பதை மறந்துவிடாமல், இன்றைய காலக்கட்டத்தில் இந்நாட்டில் குடியேற விழையும் மக்களுக்கு வரவேற்பளிப்பது கத்தோலிக்கர்களின் முக்கிய கடமை என்று ஆயர்களின் செய்தி விண்ணப்பிக்கிறது.

அயர்லாந்து, இத்தாலி, ஆப்ரிக்க நாடுகள் என்று பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறி வந்த மக்களிடையே இனவேறுபாட்டு உணர்ச்சிகள் எழுந்தாலும், அவற்றை நல்லுணர்வுகளால் வென்று வாழ்வதே, அமெரிக்க ஐக்கிய நாடு, இவ்வுலகிற்குச் சொல்லித்தரக்க்கூடிய ஒரு பாடம் என்று, தேசிய குடியேற்ற வாரத்திற்கென ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.