2017-01-10 15:38:00

பாசமுள்ள பார்வையில்...... அன்னையரிடம் கற்றுக்கொண்டது அதிகம்


இவ்வாண்டு புலர்ந்த நாளன்று கொண்டாடப்பட்ட 'மரியா, இறைவனின் தாய்' என்ற திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில், மரியன்னைக்கும், அன்னையருக்கும், புகழாரம் சூட்டினார்:

"மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக்கா 2:19). தன்னைச் சுற்றி நிகழ்வனவற்றைப் புரிந்துகொண்டு, அவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொணர மரியா விரும்பவில்லை. அவற்றை தன் உள்ளத்தில் வைத்து, பாதுகாத்து வந்தார். தனக்குள் இறைமகன் உருவான வேளையில், அவரது இதயத் துடிப்பை, செவிமடுத்து கேட்க அவர் கற்றுக்கொண்டார். இவ்வாறு, தன் வாழ்விலும், இவ்வுலக வரலாற்றிலும் இறைவனின் இதயத் துடிப்பை உற்றுக்கேட்க பழகிக்கொண்டார்.

மரியா, இறைவனின் தாய், நமது தாய் என்ற திருநாளை புத்தாண்டு நாளன்று கொண்டாடுவதால், நாம் அனாதைகள் அல்ல, ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வைப் பெறுகிறோம். தனிப்பட்டவர்களாய், தான் என்ற அகந்தை கொண்டவர்களாய் வாழும் நோய்க்கு ஒரு சிறந்த மருந்து, அன்னையர். திறந்த மனமின்றி, அக்கறையற்று வாழும் நமக்கு, மருந்தாக விளங்குபவர், அன்னையர்.

அன்னையர் அற்ற சமுதாயம், குளிர்ந்து, உறைந்துபோன சமுதாயமாகிவிடும்; அன்னையர் அற்ற சமுதாயம், இரக்கமற்ற சமுதாயமாகிவிடும்;  அன்னையர் அற்ற சமுதாயம், செய்வது ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்க்கும் சமுதாயமாகிவிடும்.

ஏனெனில், மிகக் கொடுமையானச் சூழல்களிலும், நிபந்தனையற்ற அன்பையும், பரிவையும் வெளிப்படுத்துவது, அன்னையரின் உள்ளம். சிறையில் இருப்போர், நோயுற்றிருப்போர், போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியிருப்போர் ஆகியோரின் அருகில் எந்நேரமும் காவலில் இருக்கும் அன்னையரிடமிருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன்.

போரினால் அனைத்தையும் இழந்து, முகாம்களில் தங்கியிருப்போரிடையே, தன் குழந்தைகளுக்காக தங்கள் வாழ்வை இழக்கும் அன்னையரிடம் நான் கற்றுக்கொண்டது அதிகம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.