2017-01-10 16:47:00

திருத்தூதுப் பயணங்களை, மக்கள் பயனுள்ளவையாக அமைக்கின்றனர்


சன.10,2017. தான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணங்களில் பல, உடலளவிலும், மனத்தளவிலும், அடிக்கடி மிகவும் சோர்வைக் கொணர்ந்தாலும், இப்பயணங்களில் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் கேட்கும் சான்றுகள், அப்பயணங்களை, பயனுள்ளவையாக அமைக்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

La Stampa இத்தாலிய தினத்தாளின் நிருபர் Andrea Tornielli மற்றும், Vatican Insiderன் இணையதளத்திற்கு, தனது திருத்தூதுப் பயணங்கள் பற்றிப் பகிர்ந்து கொண்ட  நேர்காணலில், இவ்வாறு தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாயன்று வெளியாகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், திருத்தூதுப் பயணங்கள் பற்றிய புதிய நூலில், இந்நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

புவனோஸ் அய்ரெஸ் உயர்மறைமாவட்டத்தில், பேராயராகப் பணியாற்றியபோது, பயணம் செய்வதற்குத் தான் விரும்பியதில்லை எனவும், தனது உயர்மறைமாவட்டப் பகுதியிலே தங்குவதற்கு விரும்பியதாகவும், உண்மையைச் சொல்லப்போனால், பயணம் செய்வதற்குத் தான் ஒருபோதும் விரும்பியதில்லை, ஆயினும், இத்தனை பயணங்களை மேற்கொள்வேன் என்று, ஒருபோதும் கற்பனை செய்ததில்லை எனவும் கூறினார் திருத்தந்தை.

புலம்பெயர்ந்தவர்கள் கடலில் இறப்பது குறித்த செய்திகள், தன்னை மிகவும் கவலையடையச் செய்ததால், லாம்பெதூசா தீவுக்குச் செல்ல வேண்டுமென்று விரும்பினேன், இத்திருத்தூதுப் பயணம், ஏற்கனவே திட்டமிடப்படாமலும், அழைப்புக்கள் இன்றியும் இடம்பெற்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அத்தீவில், காப்பாற்றப்பட்டு வாழ்பவர்கள் பற்றிய படங்களைப் பார்த்தது, அத்தீவில் வாழும் மக்களின் தாராளம் மற்றும், உபசரிப்புகள் பற்றிய சாட்சிகளைப் பெற்றது போன்றவைகளால், அங்குச் செல்வது முக்கியமாகத் தெரிந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அடுத்து, 2013ம் ஆண்டில், பிரேசிலின் ரியோவில் நடந்த உலக இளையோர் தினத்திற்குச் சென்றேன், அது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது, இப்போது, அழைப்பிதழ்கள் வருகின்றன, திருஅவைகளைச் சந்தித்து, நாம் வைத்துள்ள நம்பிக்கை விதைகளை விதைத்து, மக்களை ஊக்கப்படுத்த, திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென உணருகிறேன் எனவும், அந்நேர்காணலில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, இத்தாலியத் தீவான லாம்பெதூசாவுக்கு, தனது முதல் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.