2017-01-09 16:25:00

வீடற்றவர்க்கு உதவ திருத்தந்தை வேண்டுகோள்


சன.09,2017. இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஒவ்வொருவரும் மற்றவர்களின் நலன் குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்களின் தனிப்பட்ட உரிமைகளுக்காக மட்டும் எப்போதும் குரல் எழுப்பிக்கொண்டிருந்தால், அங்கு அமைதி கிட்டாது' என, அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நாள்களில், கடும் பனிப்பொழிவால் துன்புறும் மக்களையும், இதில் இறந்தவர்களையும், குறிப்பாக, வீடுகளின்றி இருப்போரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு உதவுமாறு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலையில், தான் திருமுழுக்கு வழங்கிய குழந்தைகள் பற்றியும், மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, தங்கள் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பதற்குத் தயாரித்துவரும் அனைத்துப் பெற்றோர்மீது தூய ஆவியார் பொழியப்பட செபித்தார்.

இன்னும், தனது மாதச் செபக் கருத்துக்களுடன் அனைவரும் இணைந்து செபிக்கவும், சமூகவலைத்தளங்கள் வழியாகவும் பரப்பப்படும் இச்செபக்கருத்தை, ஒவ்வொரு மாதமும், உலகளாவியத் திருஅவைக்கு, தான் அறிவிக்க இருப்பதாகவும் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.  

இதற்கிடையே, சான் எஜிதியோ  கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, வீடுகளற்று, கடும் குளிரால் வாடும் 250 பேருக்கு, ஞாயிறன்று மதிய உணவு வழங்கி உதவியுள்ளது.

உரோம் நகரில், வத்திக்கான் நடத்தும் மூன்று பிறரன்பு இல்லங்களுக்கு, வீடின்றி தெருவில் வாழ்வோர், எந்நேரத்திலும் செல்வதற்கு, அவ்விடங்கள் எப்பொழுதும் திறந்திருக்கவும், அங்குச் செல்வதற்கு விரும்பாதவர்கள், வாகனங்களில் தங்குவதற்கும், திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.