2017-01-09 15:42:00

பிலிப்பீன்ஸ் அமைதி முயற்சியில் பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு


சன.09,2017. பல ஆண்டுகளாக மோதல்களில் ஈடுபட்டுவரும் பிலிப்பீன்ஸ் அரசும், கம்யூனிச புரட்சியாளர்களும், அமைதி முயற்சிகளில் பொதுமக்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.

நீடித்த, நிலையான அமைதி கிட்டவேண்டுமெனில், அரசும் புரட்சியாளர்களும் மட்டும் தலையிட்டால் போதாது, பொதுமக்களும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றார், பிலிப்பீன்சின், பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் ஃபீலிக்ஸ்பெர்த்தோ கலாங்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆழமாகத் தொடர வேண்டுமெனில், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அருள்பணியாளர்கள், பொதுமக்கள் என, அனைவரும் பேச்சுவார்த்தைகளில் அங்கமாக இருக்கவேண்டும் எனக் கூறும் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், மோதல்களுக்கான மூலகாரணங்கள் முதலில் ஆராயப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டுக்குப் பின், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நார்வேயின் ஓஸ்லோவில் மீண்டும் துவக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டமாக இவ்வாண்டு உரோம் நகரில் பேச்சுவார்த்தைகள் தொடர, திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.