2017-01-09 16:04:00

கண்டுகொண்டு, வணங்கி, பின்பற்றவேண்டிய இயேசு, நம் மையம்


சன.09,2017. நம் வாழ்வின் மையமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவை, கண்டுகொள்ள அழைக்கப்பட்டிருக்கும் நாம், வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் அவரை அடையாளம் கண்டுகொள்ள முயல்வோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து பிறப்பு கால விடுமுறைக்குப் பின், இத்திங்களன்று மீண்டும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றுதலை துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வின் தினசரித் தேர்வுகளில், இயேசுவை மையமாகக் கொள்வது என்பது, அவரை அறிந்து கொள்வதையும், வணங்குவதையும், பின்பற்றுவதையும் தன்னுள் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார்.

இயேசு கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக உள்ளாரா? இயேசுவுடன் நம் உறவு என்ன? என்ற கேள்விகளை ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னுள் எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவிவிலியம் என்பது, நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிவதற்கான ஒரு விதையாக உள்ளது, அந்த விதை முளைவிட்டு வளர உதவுபவர் தூய ஆவியாரே எனவும் உரைத்த திருத்தந்தை, இயேசுவை வழிபடுவதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் தூக்கி வீசியெறிவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இயேசுவைக் கண்டுகொள்வது, அவரை வணங்குவது என்ற இரு நிலைகளுக்கு அடுத்து, அவரைப் பின்பற்றுவதைப் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ளத் தேவையான பலத்தை வழங்குமாறு, இறையருளை நோக்கி வேண்டுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.