2017-01-09 15:53:00

அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு காரணம், ஆன்மீக வறுமை


சன.09,2017. கடந்த ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசு, மத்திய ஆப்ரிக்க குடியரசு, பெனின், கிழக்கு திமோர், பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அரபு  குடியரசுகள், பாலஸ்தீனம் ஆகியவைகளுடன் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு ஒப்பந்தங்கள், ஒப்பந்த அமலாக்கம் ஆகியவை குறித்து, தன் மகிழ்ச்சியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் நோக்கில், திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களை, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் இடம்பெற்ற அரசியல் உறவு முன்னேற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டதோடு, முதல் உலகப் போரைத் தொடர்ந்த கடந்த நூறு ஆண்டுகளில் இடம்பெற்றுவரும் அமைதி நடவடிக்கைகள் மற்றும் அமைதிக்கான ஏக்கம் பற்றியும் விவரித்தார்.

பல இலட்சம் மக்கள் இன்னும் மோதல்களின் பகுதிகளில் வாழ்வதோடு, அகதிகளின் துன்ப நிலைகளும் தொடர்கின்றன என்ற திருத்தந்தை, அதன் காரணமாக இன்றைய உரையை, 'பாதுகாப்பு மற்றும் அமைதி' என்ற தலைப்பில் எடுத்துரைப்பதாகக் கூறினார்.

அமைதி என்பது போரற்ற நிலையையும் தாண்டியது என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத நோக்கங்களுடன் வன்முறைகள் இடம்பெறுவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

அடிப்படைவாதக் கொள்கைகளால் தூண்டப்படும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது, ஆன்மீக வறுமையிலிருந்து பிறந்து, சமூக வறுமையோடு தொடர்புள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை ஊக்குவிப்பதில் அரசியல் தலைவர்களின் கடமையை வலியுறுத்தினார்.

அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில், இயற்கையின் மீது நாம் கொள்ளும் அக்கறை இன்றியமையாதது என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போதைய நிலவரப்படி, வத்திக்கான் நாட்டுடன், 182 நாடுகள் அரசியல் உறவைக் கொண்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.