2017-01-07 14:49:00

வெனிசுவேலாவின் பொதுவுடமை சர்வாதிகாரப் போக்கு குறித்து கவலை


சன.07,2016. வெனிசுவேலா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவு மற்றும், மருந்து பற்றாக்குறை குறித்து, தனது புத்தாண்டு செய்தியில், கவலை தெரிவித்துள்ளார், அந்நாட்டு கர்தினால் ஹோர்கே உரோசா சவினோ.

வெனிசுவேலாவில், இப்போது போன்று, எந்தக் காலத்திலும், குப்பைக்கூளங்களில், மக்கள் உணவைத் தேடியதில்லை என்றுரைத்துள்ள கரக்காஸ் பேராயர், கர்தினால் சவினோ அவர்கள், தற்போது அந்நாட்டில் நிலவும் உணவு மற்றும், மருந்து நெருக்கடி, பொதுவுடமை சர்வாதிகாரப் போக்குடன் தொடர்புடையது என்று குறை கூறியுள்ளார்.

வெனிசுவேலாவின் பொதுவுடமை சர்வாதிகாரப் போக்கு, நாட்டின் பொருளாதாரம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசுக்கு உதவியுள்ளது என்று குறை கூறியுள்ள கர்தினால் சவினோ அவர்கள், அந்நாட்டின் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறும் விண்ணப்பித்துள்ளார்.

தனது துணை ஆயர்களுடன் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ள கர்தினால் சவினோ அவர்கள், நாட்டில், வன்முறையற்ற கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

வெனிசுவேலாவில் இடம்பெறும் அனைத்து மோதல்களும், அமைதியான வழியில் தீர்க்கப்பட வேண்டுமென்ற தனது ஆவலையும், புத்தாண்டு செய்தியில், வெளிப்படுத்தியுள்ளார், கர்தினால் சவினோ.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் ஏறக்குறைய 3 கோடியே 90 ஆயிரம் மக்களில், 96 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டின் ஊர்பி எத் ஓர்பி செய்தியின்போது, வெனிசுவேலாவின் தற்போதைய நெருக்கடி நிலைகள் களையப்பட்டு, அனைத்து மக்களுக்கும், நம்பிக்கை நிறைந்த எதிர்காலம் அமைய வேண்டுமெனச் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.