2017-01-07 14:38:00

அருள்சகோதரியின் பாலியல் வழக்கின் தீர்ப்பு மாபெரும் அநீதி


சன.07,2017. இந்தியாவின் சட்டிஸ்கார் மாநிலத்தில், ஒரு கத்தோலிக்க அருள்சகோதரியை, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டிருப்பது, மாபெரும் அநீதியான செயல் என, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர், தனது வன்மையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஓர் அருள்சகோதரியின் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இரு குற்றவாளிகள், விடுதலை செய்யப்பட்டிருப்பது, அர்ப்பணிக்கப்பட்ட அருள்சகோதரிகளுக்கு மட்டுமல்ல, இத்தகைய பாலியல் கொடுமையால் துன்புறும் அனைத்துப் பெண்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதி எனக் குறை கூறினார், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

அமலமரி சலேசிய மறைப்பணியாளர் சபையைச் சேர்ந்த, 48 வயது நிரம்பிய  ஓர் அருள்சகோதரியை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின்பேரில், கைது செய்யப்பட்டிருந்த, 19 வயது நிரம்பிய Dinesh Dhurv, 25 வயது நிரம்பிய Jitendra Pathak ஆகிய இருவரையும், போதிய ஆதாரங்கள் இல்லையென்று சொல்லி, சட்டிஸ்கார் நீதிமன்றம், சனவரி 05, இவ்வியாழனன்று விடுதலை செய்தது.

இது குறித்து, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இக்குற்றவாளிகள், கடும் சமூகத் தீமைகளுக்குக் காரணமாவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.