2017-01-05 16:03:00

ஐ.நா.வின் புதிய பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்களின் முதல் உரை


சன.05,2017. நேரியவற்றை செய்வது மட்டும் போதாது, மாறாக, நேரியவற்றை செய்வதற்குத் தேவையான உரிமைகளையும் நாம் பெறவேண்டும் என்று ஐ.நா.வின் புதிய பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

இவ்வாண்டின் புத்தாண்டு நாளன்று ஐ.நா. பொதுச் செயலராகப் பொறுப்பேற்ற கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றுவோருக்கு அளித்த முதல் உரையில் இவ்வாறு கூறினார்.

ஐ.நா.அவை, உலகில் சாதனைகள் ஆற்றுவதற்கு, ஒருங்கிணைந்த முயற்சிகளும், தவறுகளை இனம்கண்டு திருத்திக் கொள்ளும் துணிவும் தேவை என்று, கூட்டேரஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

நாம் ஆற்றும் பணிகளில் புதுமைகள் நிகழ்ந்துவிடாது என்பதை எடுத்துரைத்த கூட்டேரஸ் அவர்கள், ஒரு குழுவாக இணைந்து செயலாற்றுவதே வெற்றிகளைக் கொணரும் என்று கூறினார்.

2017ம் ஆண்டுக்கென, அரசுத்தலைவர்கள், அதிகாரிகள், மக்கள் அனைவருக்கும் பல்வேறு இலக்குகள் இருந்தாலும், உலகக் குடும்பம் என்ற முறையில் அமைதியை நம் முதல் இலக்காகக் கொள்வது, அனைவருக்கும் பலனளிக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள்  விண்ணப்பித்தார்.

1995ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு முடிய, போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகப் பணியாற்றிய அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு முடிய, ஐ.நா.வின் புலம் பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.