2017-01-05 15:36:00

இல்லங்களுக்கு முன், உள்ளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்


சன.05,2017. இல்லங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன், உள்ளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது கூறினார்.

மத்திய இத்தாலியில், 2016ம் ஆண்டு, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் பணியாற்றும் பங்கு அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தனர்.

அத்தருணத்தில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரில் சிலர் தங்கள் அனுபவங்களை எடுத்துரைத்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அவர்களுக்குப் பிரசங்கம் வழங்குவது சரியானதல்ல என்று கூறி, தயாரித்திருந்த உரையை வழங்காமல், அவர்களின் பகிர்வுகளுக்கு பதில்தரும் வகையில், தன் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

'நாளை நலமாக அமையும்' என்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது, குறுகிய காலத்திற்கு உதவியாக இருக்கும்; ஆனால், இறைவன் நம் வாழ்வை கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கை உணர்வுகளை வளர்த்துக்கொள்வது, நீண்ட காலம் பயன் தரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

துயரங்கள் வந்ததும், தங்கள் ஆடுகளைத் தவிக்கவிட்டு ஓடிவிடும் கூலிக்காரர்களைப்போல் அல்லாமல், துயருறும் தங்கள் பங்கு மக்களுடன் தங்கி, அவர்களுக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்துவரும் பங்கு அருள்பனியாளர்களைக் கண்டு நான் உண்மையில் பெருமைப்படுகிறேன் என்று, திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மேலும், "நாம் ஒருவர் ஒருவரை எவ்விதம் நடத்துகிறோம் என்பதில், பிறரன்பும், வன்முறையற்ற அகிம்சையும் நம்மை வழிநடத்தட்டும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், சனவரி 5, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.