2017-01-04 15:51:00

திருத்தந்தையின் மறைக்கல்வி: இராகேலின் கண்ணீர் காட்டுவது....


இரக்கத்தின் யூபிலி ஆண்டு முடிவடைந்தபின், தன் புதன் மறைக்கல்வி உரைகளில், கிறிஸ்தவ நம்பிக்கை குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, எரேமியா நூலின் 31ம் பிரிவு கூறும்,  'இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கின்றார்' என்ற வார்த்தையையும், அதைத் தொடர்ந்து வரும்,  'உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு’, என்ற வார்த்தையையும் மையமாக வைத்து தன் மறைக்கல்வி உரையை வழங்கினார்.

கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, யாக்கோபின் மனைவியான இராகேல் குறித்து நோக்குவோம். இவர் தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தபோது உயிர் துறந்தார். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் வேறு நாட்டில் நாடு கடத்தப்பட்டவர்களக வாழ்ந்தபோது, அவர்கள் அனுபவித்த துன்பங்களை விவரிக்க முனையும் இறைவாக்கினர் எரேமியா அவர்கள், தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கும், அதேவேளை, ஆறுதல் பெறவும் மறுக்கும் ஒரு தாயின் கண்ணீராக இராகேலின் கண்ணீரைக் காண்பிக்கிறார். தன் குழந்தையை இழந்த ஒரு தாயின் துயரத்தை அறிந்தவர்களால், இந்த உவமானத்தின் சக்தியைப் புரிந்துகொள்ள முடியும். இராகேலின் கண்ணீருக்குப் பதில் மொழியாக இறைவன், அவர்கள் நாடு திரும்பும்போது புதியதொரு வாழ்வைப் பெறுவர் என்ற வாக்குறுதி வழியாக ஆறுதல் வழங்குகிறார். இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நாம், எரேமியாவின் இந்த இறைவாக்கை, மாசற்ற குழந்தைகள் விழாவில் வாசிக்கின்றோம். அந்நாளின் நற்செய்தி வாசகத்தில், நற்செய்தியாளர் மத்தேயுவும், இராகேலின் கண்ணீரை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். அதாவது, தங்கள் கண்முன்னாலேயே தங்கள் குழந்தைகள் கொல்லப்படுவதை காணும் தாய்மார்களின் துன்பத்தை விவரிக்கும்போது. வாழ்வை அழிக்கும் கொடுஞ்செயலுக்கு பலியானவர்கள் இக்குழந்தைகள். இருப்பினும், அன்னைமரியில், சிலுவையினடியில் நின்ற நம் தாய் மரியில், இந்த இறைவாக்கு, தன் நிறைவைக் கண்டது. உயிர்த்த இயேசுவின் உடலாம் திருஅவையில், விசுவாசத்தின் வழியாக குழந்தைகளாக மாறியுள்ள அனைவருக்கும், புதிய நம்பிக்கையும் வாழ்வும் வழங்கப்படுகிறது, தன் மகனை இழந்த அன்னை மரியாவின் கண்ணீர் வழியாக.

இவ்வாறு, தன் மறைக்கல்வி போதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டின் மனாவுஸ் சிறையில் இச்செவ்வாய்க்கிழமையன்று, இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இறந்தோர், அவர்களின் குடும்பங்கள், சிறைக்கைதிகள், அங்குப் பணிபுரிவோர் என அனைவருக்காகவும் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. சிறை என்பது, கைதிகளுக்கு கல்வி வழங்குவதற்கும், அவர்களை, சமூகத்தில் மீண்டும் இணைப்பதற்கும் உதவும் இடமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.