2017-01-04 15:49:00

திருத்தந்தை ஆசியுடன் அர்ஜென்டீனாவில் L’Osservatore Romano


சன..04,2017. வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romano, இறையரசின் பணியில் இணைந்திருக்கும் ஒரு முயற்சி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய ஒரு செய்தி, அர்ஜென்டீனா நாட்டில் வெளியிடப்பட்டது.

வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவின் அர்ஜென்டீனா பதிப்பு, டிசம்பர் 30, கடந்த வெள்ளியன்று, முதல் முறை வெளியானதையொட்டி, திருத்தந்தை, தன் கைப்பட எழுதியிருந்த செய்தி, அப்பதிப்பின் முதல் பக்கத்தில் வெளியானது.

திருப்பீடத்தின் இச்செய்தித்தாள் வழியே, திருத்தந்தையின் பணிகளில் அர்ஜென்டீனா மக்கள் நேரடியாக ஈடுபட முடியும் என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பு, சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், மாத இதழ்களாகவும், மார்ச் மாதம் முதல் வார இதழ்களாகவும் வெளியாகும் என்று  L’Osservatore Romano அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.