2017-01-04 15:16:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – ஓர் அறிமுகம்


சன.04,2017. வரலாறு என்பது, மனிதர்களின் கடந்த காலத்தைப் பற்றி, மனிதர்களால் எழுதப்பட்ட ஏடுகளைப் படிப்பதாகும். வரலாறு என்பது, நாம் என்ன நினைக்கின்றோம் என்பது அல்ல, நாம் எதை நினைவில் வைத்திருக்கின்றோம் என்பதாகும். வரலாறு, என்பது, நிகழ்காலத்திற்கும், கடந்த காலத்திற்கும் இடையே நடக்கும் உரையாடல். நாம் யார், நாம் எங்கிருந்து வந்தோம், நமது தனித்துவம் என்ன, வருங்காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கற்றுத்தருவது வரலாறு. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாய்மொழியாகக் கூறுபவையே, எல்லா வரலாறுகளுக்கும் முதல் அடித்தளமாக அமைகின்றது. பின்னர், அது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறப்படுகின்றது. குடும்பங்களில், முன்னோர்கள் பற்றி, பெற்றோர் வழியாக, பிள்ளைகள் அறிந்து பெருமைப்படுகின்றனர். சுற்றுலாப் பயணிகள், தாங்கள் செல்லும் இடங்கள் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆயினும், வரலாற்றைப் படிப்பதில், ஒவ்வொருவரின் நோக்கம் வித்தியாசமாக உள்ளது. முகாலயப் பேரரசு, உரோமைப் பேரரசு, ஒட்டமான் பேரரசு, பிரித்தானிய காலனி ஆதிக்கம் போன்றவை பற்றி, நம்மில் பலர் தேர்வுக்காகப் படிக்கிறோம். ஆனால், இதே வரலாற்றை, அந்தந்த அரச குடும்பத்தினர் படிப்பது வித்தியாசமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பிரித்தானிய அரசு குடும்பத்தின் தற்போதைய வாரிசுகளான வில்லியம், ஹரி போன்றோர், அவர்களின் முன்னோர் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வது வேறு விதமாக இருக்கும். ஏனென்றால், இவர்கள், தங்கள் அரசகுலப் பெருமையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, அதை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியவர்கள். எனவே இன்று நாம் தொடங்கும் புதிய தொடரை, நம் சொந்தக் குடும்பத்தின் வரலாறாக நினைத்துக் கேட்க முயற்சிப்போம்.      

பொதுவாக, மனித வரலாறு, அளப்பெரிய கதைகளைக் கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் நடந்த வெற்றிகள், தோல்விகள், இழப்புகள், இன்பங்கள் அனைத்தையும் இது கொண்டிருக்கின்றது. கத்தோலிக்கத் திருஅவையின் வரலாறும், எண்ணற்ற தூயவர்களையும், வேதனைகளையும், பெரும் கலவரங்களையும், நெருக்கடிகளையும், இழப்புகளையும் தாங்கியிருக்கின்றது. உலக வரலாறுகளில் நாம் படிப்பது போன்று, திருஅவை வரலாற்றிலும், கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு, மெய்யியல், இறையியல், அரசியல், வானியல், தொழில்துறை போன்ற எல்லாவற்றிலும், திருஅவை புரிந்துள்ள சாதனைகளை நாம் அறியலாம். கிறிஸ்தவ சமய வரலாற்றிலும், உலக வரலாற்றிலும், கத்தோலிக்கத் திருஅவையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியவர்கள், ஒரு குழுவாக அமைந்தபோது அக்குழு, திருஅவை என்னும் பெயர் பெற்றது. உலக வரலாறே இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தியே உள்ளது. ஏனென்றால், உலக வரலாறு, கி.மு. (B.C) அதாவது, கிறிஸ்துவுக்கு முன் எனவும், கி.பி. (A.D) அதாவது, கிறிஸ்துவுக்குப் பின் எனவும் பகுக்கப்பட்டுள்ளது. கி.பி. என்பதற்கு, இலத்தீனில் Anno Domini, அதாவது இறைவனின் ஆண்டு என்று அர்த்தமாகும்.

திருஅவை வரலாறு அல்லது கிறிஸ்தவ விசுவாசத்தின் வரலாறு எனப்படுவது, ஏறக்குறைய கி.பி.30ம் ஆண்டில், பாலஸ்தீனாவில், யூதர்கள் மற்றும் யூதமதத்திலிருந்து மனமாறியவர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முதல் குழுவில் ஏறக்குறைய 120 பேர் இருந்தனர் என்று, திருத்தூதர் பணிகள் நூல் 1,15ல் வாசிக்கிறோம். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர், பெந்தக்கோஸ்து திருவிழா நாளில், அவரின் திருத்தூதர்கள், எருசலேம் மாடி அறையில், தூய ஆவியரால் ஆட்கொள்ளப்பட்டனர். அந்நாளில், திருத்தூதர் பேதுரு அவர்கள் ஆற்றிய உரையைக் கேட்டவர்களில், ஏறக்குறைய மூவாயிரம் பேர் அன்றே திருமுழுக்குப் பெற்றனர் (தி.பணி.2,41). எனவே, திருஅவைக்குத் தொடக்கமும், உயிருமாக இருப்பவர் தூய ஆவியார். அன்று வளரத் தொடங்கிய கிறிஸ்தவம், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குள், மத்தியதரைக் கடல் பகுதியின் வடக்கில், ஒரு வலுவான மதமாக வளர்ந்தது. நாளடைவில் அது, மத்தியதரைக் கடல் பகுதியின் கிழக்கிலும், தெற்கிலும், முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இத்திருஅவை தெய்வீகமும், மனிதத்தன்மையும் கொண்டது. இத்திருஅவையின் வரலாற்றை, தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள், திருத்தூதர்கள், திருஅவைத் தந்தையர் காலம், மத்திய காலம், கிறிஸ்தவத்தில் பிரிவினை தோன்றிய காலம், நவீன காலம், இக்காலம் எனப் பிரித்து, அவை ஒவ்வொரு காலத்தைப் பற்றி, இப்புதிய தொடரில் பார்ப்போம்.

வரலாறு என்பது, கிறிஸ்தவப் பார்வையில், இறைவனை நோக்கிச் செல்லும் ஒரு பயணம். திருஅவையின் வரலாறு புனைக்கதை அல்ல. அது உண்மை வரலாறு. மனுஉரு எடுத்து, எருசலேமில், கல்வாரியில், சிலுவையில் அறையுண்டு உயிர்த்த இயேசுவைக் கொண்ட வரலாறு. இந்த வரலாறு, மனிதர் வாழ்வில் இறைவன் பங்குகொண்டு, இயேசு கிறிஸ்து வழியாக, உயர்நிலைக்கு நடத்திச் செல்லும் திருப்பயணமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும், இத்திருஅவையின் தொடக்க முதல், எண்ணற்ற கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலை இன்றுவரை தொடர்கின்றது. 2014ம் ஆண்டில் மட்டும், ஒரு இலட்சத்து, ஐந்தாயிரம், 2016ம் ஆண்டில் மட்டும், ஏறக்குறைய தொண்ணூறாயிரம் என, கிறிஸ்தவர்கள், தங்கள் விசுவாசப் பற்றுதிக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறார் சமூகவியலாளர் Massimo Introvigne. ஆயினும், திருஅவையின் வளர்ச்சியை எந்த ஒரு தீமையாலும், பயங்கரவாத்தாலும், அழிக்க முடியவில்லை என்பதே வரலாற்றில் நாம் காணும் உண்மை. எனவே, திருஅவையின் வரலாறு, சாம்பலில் பூத்த சரித்திரமாக தழைத்து வளருகின்றது என்பதே நிதர்சனம். சாம்பலில் பூத்த இந்தச் சரித்திரம் தொடரும். வரலாறு வாழ்வுக்கு வழிகாட்டும் ஆசிரியர் என்று, இலத்தீனில் ஒரு கூற்று உண்டு. திருஅவையின் வரலாறு, நம் எல்லாரின், குறிப்பாக, கிறிஸ்தவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியாக அமையட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.