2017-01-04 16:02:00

அனைவரையும் வரவேற்க கதவுகளைத் திறக்கும் திருஅவை


சன..04,2017. அனைவரையும் வரவேற்க தன் கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் திருஅவையை, மக்களை நோக்கிச் செல்லும் திருஅவையை, 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலின் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு முன் வழங்கியுள்ளார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றும் கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி (Lorenzo Baldisseri) அவர்கள், 'அன்பின் மகிழ்வு' மடலை மையப்படுத்தி நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

வரவேற்பது, துணையாகச் செல்வது, தேர்ந்து தெளிவது, மற்றும் ஒருங்கிணைப்பது ஆகியவை, 'அன்பின் மகிழ்வு' மடலின் சிறப்பு அம்சங்கள் என்று, கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

திருமணம், மற்றும் குடும்ப வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளால் காயப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு, நம்பிக்கை தரும் இம்மடல், இன்றைய உலகில், திருஅவையின் தலையாய அழைப்பை, தெளிவாகக் கூறுகிறது என்று, கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள் எடுத்துரைத்தார்.

அருள்மயமானவர் இறைவன் என்பதை, அண்மையில் நிறைவுற்ற இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, நமக்குத் தெளிவாக்கியது என்றும், இந்த உண்மைக்கு நாம் தரும் தகுந்த பதில், நம் பிறரன்பில் வெளிப்படும் என்றும் கூறிய கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், நம் பிறரன்பை வெளிப்படுத்தும் வழிகளை, 'அன்பின் மகிழ்வு' என்ற மடல் என்று வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.